காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி காங்கிரஸை தான் சேரும் என்று சென்னையில் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கான தேசிய தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து தமிழக தலைவர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நேற்று சசிதரூர் சென்னை வந்தார்.
சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் சத்தியமூர்த்திபவனில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், ”தமிழகத்திற்கு வருகை தந்து ராஜிவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது. அதே போல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காமராஜரின் பங்கு தமிழகத்திற்கு அதிகமானது.
குறிப்பாக, மலைவாழ் மக்கள் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சி போன்றவைகளில் மிகப்பெரிய பங்கு உள்ளது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு!
கட்சியின் ஒற்றுமைக்கு எனது பெரும் பங்கை அளிப்பேன். கட்சி பொறுப்புகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை வழங்குவேன்.
காங்கிரஸ் கட்சி என்பது தேர்தலில் போட்டியிடக்கூடிய சம்பிரதாய கட்சியாக மட்டுமில்லாமல், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேடிச்சென்று செய்து தரும் சிறந்த கட்சியாக மாற்றி காட்டுவேன்.
நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். புத்துயிர் ஊட்டுவேன்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்.
காந்தி குடும்பத்தின் ஆதரவு!
சோனியா காந்தியின் குடும்பம் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கேக்கு ஆதரவு அளித்து வருவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகிறது. ஆனால் அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடைபெறும். அதில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி. தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் ஆதரவு கோருகிறேன்.
ராகுல் யாத்திரையால் கட்சி எழுச்சி பெறும்!
இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் காலை 6:00 மணிக்கு ராகுல் நடைபயணத்தை துவக்குகிறார். தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருடன் நடந்து செல்கின்றனர்.
இந்த பயணம் காஷ்மீரில் நிறைவு பெறும்போது, கட்சியில் பெரிய எழுச்சி அடையும். அரசியல் திருப்பங்கள் உருவாகும். இது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றியை தரும். பா.ஜ.,வின் தோல்விக்கு, காங்கிரசார் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.” இவ்வாறு சசி தரூர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”கத்தார் உலகக்கோப்பையுடன் விடை பெறுகிறாரா மெஸ்ஸி?
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்!