மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை என்று அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவை திமுகவுடன் இணைத்திட வேண்டும் என்று அக்கட்சி அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்று மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,
“கட்சிக்குள் குழப்பம் இருப்பது போல இல்லாத ஒன்றை செய்தியாக்குவதற்கு சிலர் முயற்சித்தார்கள். ஆனால் அது தோற்றுப்போய் விட்டது.
இந்த சூழ்நிலையில் பொதுக்குழுவிற்குப் பிறகு மதிமுக முன்பைவிட மிகவும் வேகமாக செயல்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இரண்டு வருடங்களாக கட்சிக்குள் வராதவர் இப்போது வந்து அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திற்காகவா இருக்க முடியும். மதிமுகவை திமுகவுடன் இணைப்பதால் அவருக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கலாமே தவிர 99.9 சதவீதம் தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை. இது தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய தொண்டர்களின் உணர்வு.
30 வருடம் நாங்கள் போராடி எத்தனையோ கஷ்டங்களைக் கடந்து பயணித்து வந்துள்ளோம். இன்னும் கடந்து போவதற்கும் தயாராக இருக்கிறோம். இதையும் கடந்து செல்வோம்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், கடிதம் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,
“நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் கட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல் அதற்கு (கடிதத்திற்கு) முக்கியத்துவம் கொடுத்து நான் பேச விரும்பவில்லை” என்றார்.
மோனிஷா
பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5
மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?