சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டினை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,
தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பீகார் அமைச்சர் லெஷி சிங், சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், திரிணமூல் காங்கிரசின் சுஷ்மிதா தேவ், ஆம்ஆத்மி கட்சியின் ராக்கி பிட்லன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வரவேற்புரையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மேடையில் இருந்தவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இதைதொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சட்டமன்ற துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் மற்றும் பீகார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் லெஷி சிங் ஆகியோர் இந்தியில் உரையாற்றினர்.
சுஷ்மிதா தேவ் பேசுகையில், “தமிழ்நாட்டில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். சமூக நீதி, சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர்.
பொது நலத் திட்டங்கள் மட்டுமின்றி, மகளிர் நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு முன்னணியில் உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை பெயரளவுக்கு மட்டுமே மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.” என சுஷ்மிதா பேசினார்.
ராக்கி பிட்லன் பேசுகையில், “பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய பாஜக ஆட்சியில் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
பல்வேறு தளங்களிலும் பெண்கள் தடைகளை உடைத்து இன்று முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியுள்ளது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய லெசி சிங், “பெண்களின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsPAK: ஆக்ரோசம் காட்டிய இந்தியா… ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: சிபிசிஐடி வழக்குப்பதிவு!