மாமியார் மருமகள் சண்டை போல் இல்லாமல் தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால் தேவையான நிதி கிடைக்கும் என்று பாஜக மாநில பொறுப்பாளர் நரசிம்மன் பேசியுள்ளார்.
மதுரையில் நேற்று (பிப்ரவரி 23) நடந்த பாஜக கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொறுப்பாளரும், செய்தி தொடர்பாளருமான முன்னாள் எம்.பி நரசிம்மன் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில்,
“பிரதமர் மோடியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்களை கவர்ந்த அவரது திட்டங்களால் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழக பாஜக மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பாஜக.வின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆளும் கட்சி அஸ்தமித்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் கொரோனால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை பாஜக தான் அறிமுகப்படுத்தியது. அரசு, அரசியல் கட்சிக்கும் மக்களுக்குமிடையே பாலமாக இருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தது மத்திய பாஜக அரசு.
பாஜகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் கூட்டுறவு பிரிவு வளர்ச்சிதான் அடித்தளமாக உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 62 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடத்தில் உள்ள தமிழகத்தில் கூட்டுறவு துறை நாட்டில் மிகவும் மோசமாக உள்ளது. கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தார்கள்.
நாட்டின் தொழில், பொருளாதாரம், வேளாண்மை வளர்ச்சி எதுவாக இருந்தாலும் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் சர்க்கரை ஆலைகள் கூட்டுறவுத் துறை மூலம் இயங்கி வருவதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
கூட்டுறவுத் துறையில் தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காக ரெகுலேட்டரி கமிஷனை நியமித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் ஏராளமான ஊழல்கள் நடந்து வருகிறது. நிர்வாக சீர்கேட்டின் உச்சத்தில் இருப்பதால் தேர்தல் நடத்த முடியாத சூழலில் தமிழக அரசு உள்ளது. இதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள சட்டத்தால் ஆளும் கட்சியால் ஓட்டுக்களைத் திருடமுடியாது என்ற பயத்தில் உள்ளது.
தென் தமிழகத்தின் தலைநகராக, பாரம்பரியமிக்க புராதன நகரமாகிய மதுரை இன்னும் வளர்ச்சி பெறாமலேயே உள்ளது. கோவை, சேலம், ஈரோடு போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது. மதுரையில் மட்டும் ஏன் கொண்டுவரவில்லை. மதுரை எம்.பி வெங்கடேசன் மதுரை வளர்ச்சிக்காக பார்லிமென்டில் குரல் கொடுத்துள்ளாரா? மதுரையின் வளர்ச்சி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ அல்லது மோனோ ரயில் சேவை வேண்டுமென பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிப் பறக்கும் பாலம் அமைக்க வேண்டும்.
மதுரை, தூத்துக்குடி பெருவழிச் சாலையில் தொழில் முனைவு மையத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி முகாமை மாநில அரசு உருவாக்க வேண்டும். மாநில அரசு தொழில் முதலீட்டாளர்களிடம் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறது. தென் மாநில மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முக்கிய தொழிற்சாலைகள் மதுரை-தூத்துக்குடி பெருவழி சாலை பகுதிகளில் அமைக்க முன்வர வேண்டும். மத்திய அரசுப் பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சி முகாமை துவங்கி பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளது.
விவசாயிகளின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுதொழில் வளர்ச்சிக்கு 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இலவச வீடு கட்டும் திட்டம், இலவச இன்சூரன்ஸ் திட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்துள்ளது.
மருத்துவத் துறை வளர்ச்சிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. வேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 5ஜி அலைக்கற்றை கொண்டுவந்ததன் மூலம் கிராமங்களிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி (டிஜிட்டலைசேசன்) அதிகரித்துள்ளது.
அறிவியல், விவசாயம், விமானம், கப்பல், சாலை போக்குவரத்து, ரயில் என அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளது. ரயில்வே சேவையின் வளர்ச்சிக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ஒதுக்கி, 7 ஆயிரம் கி.மீ., நீளத்திற்குப் பாதை அமைக்கும் பணியை ஓராண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானத்துறை வளர்ச்சிக்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பலகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கிராம மக்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலா, மீன்வளத்துறை, கால்நடைத்துறை வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக 81 லட்சம் மகளிர் குழுவினருக்கு 75 ஆயிரம் கோடி கூடுதல் கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, முதலீட்டிற்குத் தேவையான பணம் இல்லை என்கிறார். மாமியார், மருமகள் சண்டை போல் இல்லாமல் மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்றால் தேவையான நிதி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி பெறும். மத்திய அரசின் செயல்பாடுகளால் உலக வரலாற்றில் முதல்முறையாக பல்வேறு நாடுகள் டாலருக்கு பதிலாக ரஷ்யா உட்பட உலகில் உள்ள 31 முக்கிய நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்து வருகின்றன” என்று பேசினார்.
கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், மாநிலச் செயலாளர்கள் ரவிராஜன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன், சிவகுமார், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் வேல்முருகன், மதுரை மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மோனிஷா
டாப் 25 பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி குழுமம்: காரணம் என்ன?
மோசமான ஓட்டுநர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா