கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ. விடம் தாமதமாக வழங்கப்பட்டதாக ஆளுநர் இன்று (அக்டோபர் 28) குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கினை மத்திய அரசு உத்தரவின் பேரில் தற்போது தேசியப் புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணை மாநில காவல்துறை பொறுப்பு!
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, கார் வெடிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறையை என்.ஐ.ஏ பாராட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”பொதுவாக ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்தால் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த மாநில காவல் துறையைச் சார்ந்ததாக இருக்கும்.
இந்த வழக்கில் விசாரணை அடிப்படையில் இதில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது அல்லது பல மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு தீவிரவாத செயல் இதில் இருக்கிறது என்பது போன்ற நிலைகள் கண்டறியப்பட்டால் தேசிய புலனாய்வு முகமை நேரடியாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்கக் கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழக காவல்துறைக்கு பாராட்டு!
இருந்தாலும் அவர்கள் முழுமையாக இந்த விசாரணையில் நம்மோடு இணைந்து இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு அரசு கிடைத்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி இந்த வழக்கை அவர்களே (என்.ஐ.ஏ) விசாரிக்கலாம் என்று முடிவு எடுத்து வழக்கை என்.ஐ.ஏவிற்கு மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி கடந்த 26ம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
சம்பவம் நிகழ்ந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்துக் கொள்வது வரை அனைத்து விவரங்களும் தமிழக காவல்துறையால் மத்திய உளவுத்துறைக்கும், அதேபோல் தேசிய புலனாய்வு முகமைக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறையினரின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
ஜமேசா முபின் விடுவிக்கப்பட்டது ஏன்?
இந்த சூழ்நிலையில் மற்றொன்றையும் நான் தெரிவிக்க வேண்டும். இதில் உயிரிழந்த ஜமேசா முபின் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
அப்பொழுது விசாரணை வளையத்தில் இருந்தவர் அதற்குப் பிறகு ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது.
அது அப்பொழுது விசாரணையில் இருந்த என்.ஐ.ஏ அதிகாரிக்குத்தான் தெரியும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
தாமதமின்றி வழக்கு ஒப்படைப்பு!
தமிழக முதல்வர் ஸ்டாலின் விபத்து நடந்த அதிகாலை முதலே ஒவ்வொரு நாளும் வழக்கு விசாரணைக் குறித்து ஆலோசித்து வழிகாட்டி வந்தார்.
அதனால் தான் தமிழகம் முழுவதும் தீபாவளியன்று எந்தவித அசாம்பாவித சம்பவங்களும் இன்றி இயல்பான முறையில் பொதுமக்கள் கொண்டாடினர்.
இந்தியாவில் கடந்த ஓராண்டுகளில் நடந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து 2 வாரங்கள் முதல் 1 மாத கால இடைவெளியில் தான் வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 23ம் தேதியில் இருந்தே, மத்திய உளவுத்துறைக்கும், தேசிய புலனாய்வு முகமைக்கும் தமிழக போலீசார் விவரங்கள் அளித்து வந்தனர்.
வழக்கு மட்டும் தான் 4 நாட்களுக்கு பிறகு மாற்றப்பட்டதே தவிர, ஆரம்பம் முதலே தமிழக போலீசாருடன், என்.ஐ.ஏவும் இணைந்து தான் விசாரித்து வந்தனர்.
இதனால் வழக்கு தாமாதமாக என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த வழக்கை விரைந்து என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த முடிவை எடுக்க அரசு ஏன் 4 நாட்கள் எடுத்துக்கொண்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழக அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.1000 பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!
”பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்” – கடுமையாக சாடிய முன்னாள் வீரர்