அதிமுக தேர்தல்: காரசார வாதம்… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

இந்த தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 19ம் தேதி அவசர வழக்காக பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகள் வெளியிட கூடாது” என்று தெரிவித்தார். மேலும் மார்ச் 22ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், மார்ச் 24 அன்று இது தொடர்பாக தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணை ஏழு மணி நேரமாக நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது

ஓ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அவர், “தகுதி நீக்கம் செய்ய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் இதை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது எப்படி? வாதத்திற்காக மட்டுமே பொதுக்குழுவுக்கு அதிகாரம் என எடப்பாடி தரப்பில் தெரிவிக்கபடுகிறது.

போட்டியே இல்லாமல் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டு நிபந்தனைகள் விதித்து தற்போது பொது செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஓபிஎஸ் அதிமுகவில் முதலமைச்சராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். ஓபிஎஸ் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கியது நியாயமற்றது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுத்த முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது. என்று வாதிட்டார்.

பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்

மேலும் அவர், “பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூற எந்த புள்ளிவிவரமும் ஆவணமும் இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார். வழக்கையும் வாபஸ் பெறத் தயாராக உள்ளோம்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகள் நீக்கப்பட்டால் ஓபிஎஸ் உட்பட மேலும் பலர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் நீக்கப்படுமா?” என வாதிட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார்.அவர் தனது வாதத்தில் “ஓ.பன்னீர்செல்வம் தனக்கு என தனி கட்சியை நடத்தி வருகிறார். எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். நாங்கள்தான் அதிமுக என சில நபர்கள் கூறுவது புதிதல்ல. பன்னீர்செல்வத்தின் சகோதரரே விளக்கம் கேட்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சி கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழு அதிகாரமிக்கது என்பது தான். கட்சி நடவடிக்கைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது பொதுக்குழு தான். அதன் முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். யாருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.” என்றார்.

காலாவதியாகவில்லை; ரத்தானது

மேலும் அவர் தனது வாதத்தில், “ஜூன் 23ல் கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பை நீக்க காரணம். கட்சிக்கும், அதன் தலைவர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததால் நீக்கப்பட்டுள்ளனர். வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற அடிப்படை உறுப்பினர்கள், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கைக்கு ஏற்பவே ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை; ரத்து செய்யப்பட்டது. தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதால் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது.

52 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவி இருந்து வந்தது. 50 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் தற்காலிகமாக 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. தற்போது மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது; எந்த அடிப்படை கட்டமைப்பும் சிதைந்துவிடாது. எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கூடாது.” என்று வாதாடினார்.

இதேபோன்று மனோஜ் பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையே அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரியும், நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்போதைய வழக்குகளில் தன்னையும் புதிதாக சேர்க்க கோரினார்.

பன்னீருக்கு அவகாசம்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று நடைபெற்ற ஏழு மணி நேர விசாரணைக்கு பின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கெனவே எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை தொடர்பான தீர்ப்பு மார்ச் 24ம் தேதி அளிக்கப்படும் என நீதிபதிகள் மார்ச்19ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

போனஸ் தொகையால் அதிர்ச்சியில் உறைந்த ’எவர்கிரீன்’ ஊழியர்கள்!

பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “அதிமுக தேர்தல்: காரசார வாதம்… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

  1. மக்கள் “சப்பை” ஆக்கிய பிறகு இவர்கள் கார சாரமாக வாதிட்டு என்ன பயன்? இரண்டு பேர் தமிழரைக் கொள்ளை அடித்த பணம் நீதி மன்ற ‘வாய்க்கால்’ வழி ஓடி வழக்கறிஞர்கள் சொத்தாகும் நிலங்களில் பாய்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *