செங்கோல் கூட்டத்திற்கு சேகர்பாபுவை அனுப்பியது ஏன்? : முதல்வர் விளக்கம்!

Published On:

| By christopher

செங்கோல் தொடர்பாக மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் மாநில அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 31) இரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவருக்கு அமைச்சர்கள், எம்.பி,க்கள், எம்,எல்,ஏக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் ஒன்று கூடி வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

அவர், “வரும் 2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக அரசு நடத்த உள்ளது.

இந்த பயணத்தின் மூலம் 3,223 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ” என்றார்.

தொடர்ந்து செங்கோல் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

“ஒன்றிய அரசின் சார்பில் விழா நடத்துவதற்கான கலந்துரையாடல் என்று சொல்லி தான் அழைத்தார்கள்.

அதனால் தான் அமைச்சர் சேகர்பாபுவை அனுப்பி வைத்தேன். அங்கு அவர் போனதற்கு பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.

அந்த நிகழ்ச்சிக்கு சென்ற சேகர்பாபுவே விளக்கம் அளித்திருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் சொல்லி இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “உண்மையான சோழ பரம்பரையில் வந்த செங்கோலாய் இருந்தால் அது தமிழர்களுக்கு பெருமை.

ஆனால் சோழர்களுக்கும், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

மேலும் செங்கோலை பிரதமர் வாங்கிய அன்றே அது வளைந்து விட்டது.  மல்யுத்த வீராங்கனைகளை அடித்து உதைத்து கைது செய்யப்பட்டதை பார்த்திருப்பீர்கள். அது சாட்சியாக அமைந்திருக்கிறது. இதுதான் உண்மை.” என்றார்.

முன்னதாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ’செங்கோல் பற்றி பாஜகவினர் கூறியது எல்லாம் கட்டுக்கதைகள்’ என்று பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“பாஜக ஆட்சியை பொருத்தவரை வருமானவரித்துறை சிபிஐ அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பழி வாங்குவது அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டிலும் அந்த வேலையை தொடங்கி இருக்கிறது” என்றார்.

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளதே என்ற கேள்விக்கு, “மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கெனவே கூறிவிட்டார். அதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும்.” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்!

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் எது தெரியுமா?

no connection between chozhas and sengol
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel