துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் இன்று (டிசம்பர் 10) நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தங்கர் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை முன்னிட்டு அரசியலமைப்பு பிரிவு 67(b) கீழ், மாநிலங்களவை செயலாளர் பி.சி. மோடியிடம் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயராம் ரமேஷ் மற்றும் நஸீர் ஹுசைன் இன்று நோட்டீஸ் சமர்பித்தனர்.
இந்த நோட்டீஸில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல எம்.பிக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் “இந்தியா’ கூட்டணியை சேர்ந்த அனைத்துக் கட்சிகளும், மாநிலங்களவையில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டதற்காக, மாநிலங்களவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஜனநாயகத்தின் நலன்களுக்காக ‘இந்தியா’ கூட்டணி இந்த வேதனையான முடிவை எடுத்துள்ளது. இதற்கான நோட்டீஸை மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பிரிவு 67 (b) என்ன சொல்கிறது என்றால் “துணை ஜனாதிபதியை அவரது பதவியில் இருந்து நீக்க, மாநிலங்களவையில் அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நிறைவேற்றவேண்டும். அதன் பின் அது மக்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஆனால் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு 14 நாட்களுக்கு முன் நோட்டீஸ் தரப்பட வேண்டும்.”
‘இந்தியா’ கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லை. அதனால் இந்த தீர்மானம் நிறைவேறாது. தங்களது எதிர்ப்பை தெரிவிக்கத்தான் இந்த நோட்டீஸை இந்தியா கூட்டணி சமர்ப்பித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக இப்போது தான் துணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்காக நோட்டீஸ் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? – முழு விவரம்!
முஸ்லிம்கள் குறித்து நீதிபதி சர்ச்சை பேச்சு… விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!
இந்தியாவில் 3 முறை எம்.எல்.ஏவான ஜெர்மன் சிட்டிசன்; இந்திய குடியுரிமை பறிப்பு!