மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக மக்களவை காங்கிரஸ் எம்.பி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் விவாதிக்க இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் ஜூலை 26-ஆம் தேதி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் மோடி பேச உள்ளார். இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து காங்கிரஸ் எம்.பி சுரேஷ் பேசும்போது, “மணிப்பூர் விவகாரம் குறித்து மட்டும் தான் நாங்கள் பேச உள்ளோம். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை. அதனால் தான் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்தோம்.
மக்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை இருப்பினும் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்” என்று தெரிவித்தார்.
மக்களவையில் உள்ள 543 இடங்களில் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
பாஜகவுக்கு 303 உறுப்பினர்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்.பிக்கள் ஆதரவும், இந்தியா கூட்டணிக்கு 144 எம்.பிக்கள் ஆதரவும்,
இரண்டு தரப்புக்கும் ஆதரவளிக்காமல் உள்ள பாரத ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் கட்சிகளுக்கு 70 உறுப்பினர்களும் உள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும். பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பது எதிர்க்கட்சிகளின் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை!
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: தமிழ்நாடு புதிய சாதனை!
நாடகமும் நடிப்பும் முடிவுக்கு வந்தது: செந்தில் பாலாஜியை விளாசிய கிருஷ்ணசாமி
“ஆட்சி மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும்” – கெஜ்ரிவால்