பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி இன்று (ஜூலை 26) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் இதுவரை பிரதமர் நாடாளுமன்றத்துக்குள் மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காத நிலையில், மணிப்பூர் சம்பவம் பற்றி நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஜூலை 26) மணிப்பூர் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடியின் பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த களியாபோர் மக்களவைத் தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவருமான கவுரவ் கோகாய் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
கவுரவ் கோகாய் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்ததும், அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழிமொழிந்தன.
அதன்பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதுகுறித்து அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசித்துவிட்டு விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்படும் என்றும் ஓம்.பிர்லா கூறினார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “நாங்கள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இதுபோன்ற எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைக்குப் பின்னடைவு தான் ஏற்பட்டது. 2019 தேர்தலில் நாட்டு மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டினர்” என்று கூறியுள்ளார்.
பிரியா
தேமுதிக – பாஜக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்!
கால்வாய்க்காக அழிக்கப்படும் நெற்பயிர்கள்: என்.எல்.சி விளக்கம்!