சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான சிற்பி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) தொடங்கி வைத்தார்.
சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது சிற்பி திட்டம் குறித்த விளக்க காணொளி மாணவர்களுக்காக திரையிடப்பட்டது.
மாணவர்களை செதுக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு!
அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
வருமானம் இல்லாமை, ஆதரவின்றி இருப்பது உள்ளிட்டவையே சிறார் குற்றங்களுக்கு காரணம். பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக சிறார்களை நல்வழிப் படுத்துவதற்காக சிற்பி என்ற இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கான வகுப்புகளை காவல்துறையினரும், துறைசார்ந்த அதிகாரிகளும் நடத்துவார்கள். மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட 8 இடங்களுக்கு மாணவர்கள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள். ’ஏடு தூக்கி இன்று பள்ளியில் பயிலும் பையனே, நாடு காக்கும் தலைவனாய் நாளை விளங்க போகிறாய்’ என்று பாடினார் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்.
அத்தகைய மாணவர்களை பொறுப்புடன் வளர்க்க வேண்டியது நமது கடமை. அவர்களை சிறப்பாக செதுக்க வேண்டும்.
அவர்கள் நாளைய உலகை செதுக்குவார்கள். இந்த பயிற்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்க கூடாது. மாணவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட கூடாது.
எந்தவிதமான புகாரும் இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ” என்றார்.
என்.சி.சி. போல் சிற்பி திட்டம்!
சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் ‘சிற்பி’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!