கூட்டணி சேரும் கட்சியால் அதிமுக கொள்கையில் மாற்றம் வராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதிலும், அவர்களது நம்பிக்கையையும் மதிப்பதிலும் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடுக்கவில்லை.
அவர்கள் காட்டிய அதேவழியில் தான் நாங்கள் எப்போதும் செயல்படுவோம். அதிமுகவிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே உள்ள பாசமிகு உறவை யாராலும், எப்போதும் சிதைக்க முடியாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.” என்று கூறினார்.

கூட்டணி – கொள்கை விளக்கம்
அவர் மேலும் கூறுகையில், “சில கட்சிகளை போல சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, உங்களை ஏமாற்றும் கட்சி அல்ல அதிமுக. உங்களோடு உண்மையான அன்புடன் தோளோடு தோளாக நிற்பது தான் அதிமுக.
எங்களின் கூட்டணி என்பது வேறு! கொள்கை என்பது வேறு! கொள்கை என்பது ஒருவருடைய இன்சியல் போல அதை ஒருபோதும் மாற்ற முடியாது. எங்களது இனிசியல் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகுத்தது.
கூட்டணி என்பது அவ்வபோது ஏற்படுகின்ற அரசியல் சூழலை பொறுத்து மாறும். கூட்டணியை ஏற்பதன் மூலம் அக்கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றோம் என்று அர்த்தமல்ல. அதிமுகவிற்கு என்று கொள்கை உள்ளது. அதன்படியே நாங்கள் செயல்படுவோம்.
இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பை பின்பற்றும் இஸ்லாமியர்களோடு நானும் இறைவனை வேண்டி கொள்கிறேன். திருகுரான் அருளப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் தமிழ்நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருக நாம் எல்லோரும் இறைவனிடம் வேண்டுவோம்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.