வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடையும் நிலையில் 28 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும் என்பது விதி. இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தான் மத்திய அரசின் மானியமும் பெற முடியும். மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
பதவிக்காலம் முடிவடைகிறது!
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தான் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிணைந்து முழுமையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவி காலம் 2016-ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்படாததால் தனி அதிகாரிகள் மூலம் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டன.
தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன்மூலம் 91,975 பேர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிகாலம் வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பொதுவாக தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் 45 நாட்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். எனினும் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
தனி அதிகாரிகள் நியமனம்!
இந்நிலையில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல், அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டது போல தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் அவசரச் சட்ட மசோதாவை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ஆம் தேதி காலை 09.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற உள்ளார்.
அதன் பின்னர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனி மற்றும் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசரச் சட்ட மசோதாவைத் தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்படி, கிராம பஞ்சாயத்துக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (கிராம ஊராட்சி) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிர்வாகம் செய்வார்கள்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை 2 பகுதியாக பிரித்து, ஒரு பகுதியை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மற்றொரு பகுதியை உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோரும் நிர்வாகம் செய்வார்கள்.
மாவட்ட ஊராட்சியை அந்த மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலர் அல்லது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நிர்வாகம் செய்வார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடந்தது. தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டுள்ளதால் 28 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
தனி அதிகாரிகள் நியமிக்கப்படும் 28 மாவட்டங்களின் முழு பட்டியல் :
1 அரியலூர்
2 கோயம்புத்தூர்
3 கடலூர்
4 தருமபுரி
5 திண்டுக்கல்
6 ஈரோடு
7 கரூர்
8 கிருஷ்ணகிரி
9 மதுரை
10 மயிலாடுதுறை
11 நாகப்பட்டினம்
12 கன்னியாகுமரி
13 நாமக்கல்
14 பெரம்பலூர்
15 புதுக்கோட்டை
16 ராமநாதபுரம்
17 சேலம்
18 சிவகங்கை
19 தஞ்சாவூர்
20 தேனி
21 திருவள்ளூர்
22 திருவாரூர்
23 தூத்துக்குடி
24 திருச்சிராப்பள்ளி
25 திருப்பூர்
26 திருவண்ணாமலை
27 நீலகிரி
28 விருதுநகர்
உள்ளாட்சி தேர்தல் எப்போது? – தமிழக அரசு பதில்!
இதற்கிடையே எஸ்.சி., எஸ்.டி., மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முனியன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் தனபால் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் உத்தரவாதம் அளித்தார். அதனை ஏற்று வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய்யுடன் விமான பயணம்: வதந்திகளுக்கு நாய், சேவலை சுட்டிக்காட்டி திரிஷா பதிலடி!
மாநில அரசுக்கு அன்றாடம் ’தலைவலி’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? : கி.வீரமணி கேள்வி!
Comments are closed.