வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு அதன் பிறகு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, காவேரி மருத்துவமனை ஓய்வு ஆகியவற்றைக் கடந்து இரண்டு மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி.
அவரது ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே ஜாமீன் மனுவில் வேறு யாரும் வைத்திராத வாதமாக… ‘ பாஜகவுக்கு வர சொல்லி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அழுத்தம் கொடுத்தது’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதை அமலாக்கத்துறை தரப்பு கடுமையாக மறுத்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டது முதலாகவே இறுக்கமாக இருந்த செந்தில் பாலாஜி சிறை ஊழியர்கள் சிலரிடம் அன்றாட அவசியமான ஒரு சில வார்த்தைகளை தவிர வேறு யாரிடமும் எதுவும் பேசாமல் தான் இருந்தார்.
ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் அவருக்கு வழக்கறிஞர்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டபோது… இதன் முடிவு எப்படி இருக்கும் என்று வழக்கறிஞர்களிடம் விசாரித்தார் செந்தில் பாலாஜி.
அமலாக்கத் துறையின் பி. எம். எல். ஏ. சட்ட விதி 45 படி குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றத்திற்கான சந்தேக காரணிகள் இல்லை என நீதிபதி திருப்தி அடைந்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்ற விதி இருக்கிறது. இந்த விதியின் படி ஜாமீன் பெறுவதற்கு சட்டரீதியான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை வழக்கறிஞர்களுடன் ஆலோசனைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு இருந்தது. அதனால் கடந்த சில நாட்களாகவே தான் விடுதலையாகி விடுவோம் என்று எதிர்பார்ப்போடு இருந்தார் செந்தில் பாலாஜி.
ஆனால் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி ஜாமீன் மனு மீதான உத்தரவில்… அந்த 45 ஆம் பிரிவின்படி செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று கருத அடிப்படைகள் இல்லை என்ற முகாந்திரத்தில் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார். ஜாமீன் கனவு தகர்ந்து போன நிலையில் தளர்ந்து போய்விட்டார் செந்தில் பாலாஜி என்கிறார்கள் புழல் சிறை வட்டாரங்களில்.
செந்தில் பாலாஜியின் ஒரிஜினல் வழக்கை விசாரிக்கும் நீதிபதி இந்த காரணத்தைச் சொல்லி, ஜாமீன் மறுத்திருப்பதால் இனி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினம் என்கிறார்கள் வழக்கறிஞர் வட்டாரத்தில்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு மணல் குவாரிகள் மற்றும் மணல் பிசினஸ் அதிபர்களை மையமாக வைத்து அமலாக்கப் பிரிவு நடத்திய ரெய்டு தொடர்பாக அடுத்தடுத்த பாய்ச்சல்களை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில், ரெய்டு மேற்கொள்ளப்பட்ட மணல் தொழிலதிபர்கள் ரெய்டு நடந்து முடிந்ததிலிருந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டதாகவும் அதாவது சட்ட ரீதியாக தலைமறைவு ஆகி விட்டார்கள் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மாதக்கணக்கில் தலைமறைவாகவே இருக்கிறார். அவரைப்போல இந்த மணல் தொழிலதிபர்களையும் விட்டுவிடக் கூடாது என்ற ரீதியில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது அமலாக்கத்துறை” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!
ஆளுநருக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து: குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்த வைகோ