ஆளுநர் இறங்கி வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை இன்று (நவம்பர் 20) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ”சட்டமன்ற மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு கிடையாது. 3 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்து கொண்டிருந்தார்?” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதற்கிடையேஆளுநர் தரப்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 2020 முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு அனுப்பிய 180 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
இன்று தான் தெரிவித்துள்ளார்!
அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு 13ஆம் தேதியே அனுமதி தந்ததாக ஆளுநர் இன்று கூறியுள்ளார்.
இதனை அன்றைக்கே கூறியிருந்தால், நாங்கள் ஏன் மனுவில் தெரிவிக்கப்போகிறோம். அவர் இன்றைக்கு தான் உச்சநீதிமன்றத்தில் கூறுகிறார். எனினும் இதுகுறித்து சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு தெரிவிக்கும்.
அரசு பின்வாங்காது!
ஆளுநர் திருப்பி அனுப்பிய அதே 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி 18ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
அண்மையில் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களையும் ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளார். இத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன் என்று கூறிவிட்டு எஞ்சிய மசோதாக்களை நிலுவையில் வைப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் தான் மசோதாவிற்கு ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யும்படி மனுவில் கூறியுள்ளோம்.
தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் திமுக முன்வைத்த காலை பின்வைக்காது. ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை.
தெலங்கானா முதல்வருடன் முதலில் பேசட்டும்!
தமிழ்நாடு முதல்வரும், ஆளுநரும் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அவர் தெலுங்கானாவின் ஆளுநர் தானே… அங்கு சென்று முதல்வர் சந்திரசேகர ராவுடன் நேரில் பேச வேண்டியது தானே?
தமிழ்நாடு அரசுக்கு அவர் ஆலோசனை கூறுவதை விட்டுவிட்டு, தெலங்கானாவிற்கு சென்று முதல்வருடன் பேசி இணக்கமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை சகிப்பின் உச்சத்திற்கு சென்று பொறுத்து கொண்டது திமுக அரசு. அதனை மீறியும் அவர் வரம்பு மீறி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2023 உலகக்கோப்பை கனவு அணியில் இடம்பிடித்த 6 இந்தியர்கள்!
மரியாதை தெரியாத இடத்துல கொடுத்துட்டோமே: அப்டேட் குமாரு