பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று இன்று (செப்டம்பர் 25) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி உறவில் சிக்கல் நீடித்து வந்தது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து பேசி வந்த நிலையில், பாஜவுடனான கூட்டணி முறிந்து விட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்டம்பர் 18 ஆம் தேதி அறிவித்தார்.
செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையே நேரடியாக அதிமுகவினருக்கு பதில் தந்தார்.
சி.வி.சண்முகம் ஆறு மணிக்கு மேல் வேறு மாதிரி பேசுவார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அண்ணா பற்றிய விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்த வார்த்தை போருக்கு மத்தியில் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய அதிமுக புள்ளிகள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினர்.
இந்த சந்திப்புக்குப் பின் நேற்று (செப்டம்பர் 24) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,
அதிமுக பாஜக கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பேட்டி அளித்தார்.
இந்த பின்னணியில்தான் மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டத்தை இன்று கூட்டுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் இன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
இதற்காக பசுமை வழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிளம்பி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்துக்கு 4.15 மணிக்கு வருகைத் தந்தார்.
அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் 4.30 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் பாஜக கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
5.15 மணியளவில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசினார் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி. அவர் பேசத் தொடங்கும்போதே அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தனர்.
“அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பாஜகவின் மாநில தலைமை கடந்த ஒரு வருடமாக எங்கள் கழக தெய்வங்களையும், எங்களையும் அவதூறாக பேசியும் விமர்சித்தும் வருகிறது. எங்கள் மதுரை மாநாட்டை விமர்சித்தது.
இது கழக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் விலகுகிறது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது” என்று அறிவித்தார்.
-பிரியா
அர்ச்சகர்கள் நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Asian Games: தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!