தமிழக பாஜகவின் அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றி மக்களவைத் தேர்தலுக்காக புதிய அணுகுமுறைகளை கொண்டுவந்திருக்கிறார் அண்ணாமலை. கடந்த வாரத்தில் தொடர்ந்து சில நாட்கள் டெல்லியில் தங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பாஜக தேசிய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்திருக்கிறார்.
தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சிப் பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருந்தாலும் அண்ணாமலையின் இந்த டெல்லி பயணத்தில் மக்களவைத் தேர்தலுக்கான சில வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. டிசம்பர் 8 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நடத்திய மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இதுபற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
காலை 10 மணிக்கே கூட்டம் தொடங்கியது. மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமை தாங்கினார்.
மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. 10 மணிக்கு தொடங்கி 12.30 வரை பல்வேறு அணிகளின் தலைவர்களும், சில மாவட்ட தலைவர்களும் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். பகல் 12.20 க்கு ஹெச்.ராஜா காதில் போனை எடுத்து வைத்துக் கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியே சென்றார். அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
செல்போன்கள் இல்லாத கூட்டம்!
12.30க்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அரங்கத்துக்கு வந்தார். எல்லாருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு கேசவ விநாயகன் காதில் ஏதோ சொன்னார் அண்ணாமலை. பிறகு அந்த அரங்கத்தில் இருந்த எழுபது பேரின் செல்போன்களும் வாங்கப்பட்டு அவரவர் பெயர் எழுதிய கவரில் போடப்பட்டு அரங்கத்துக்கு வெளியே கொண்டு வைக்கப்பட்டன.
12.35 க்கு அண்ணாமலை பேசத் தொடங்கினார். ‘என்ன செல்போனை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களேனு நினைக்காதீங்க. நானும் என் செல்போனை கொடுத்துவிட்டேன். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இங்கே நாம் விவாதிக்கப் போவது வெளியே சென்றுவிடக் கூடாது என்பதால்தான் இப்படி செய்கிறோம். மோடிஜி கலந்துகொள்ளும் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கூட இப்படித்தான் பின்பற்றுகிறார்கள்” என்று முதலிலேயே முன் குறிப்பு கொடுத்த அண்ணாமலை பிறகு பேசத் தொடங்கினார்.
அதிமுகவோடு கூட்டணி இல்லை!
“எம்பி தேர்தலில் நாம் தனியாகத்தான் போட்டி போடுகிறோம். ஜீரோ சீட் வாங்கினாலும் பரவாயில்லை. நான் மோடிஜியிடமே இதை தெரிவித்துவிட்டேன். ‘நீங்கள் (மோடி) பீக்கில் உச்சகட்ட புகழில் இருக்கும் இந்த காலகட்டத்தில் கூட தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கவில்லை என்றால் நாங்கள் வேறு எப்போது வளர்ப்பது? நாம் ஐந்தாறு சீட் வாங்கி தேர்தலில் நின்று மூன்று சீட் ஜெயிப்பதை விட கட்சியை வளர்ப்பதே இப்போது முக்கியம். உங்க பீக் டைமான இப்ப ரிஸ்க் எடுக்கலைன்னா எப்ப எடுக்க முடியும்?’ என்று நான் மோடிஜியிடமே இந்த முடிவை பற்றி சொல்லிவிட்டேன்.
மோடி பார்க்காத சவாலா?
நமது இலக்கு தமிழ்நாட்டில் எம்பி தேர்தலில் தனியாக நின்று நமது வாக்கு சதவிகிதத்தை உயர்த்த வேண்டும். குஜராத்தில் மோடிஜியை கேஷுபாய் பட்டேல் குஜராத்துக்கே வரக் கூடாது என்று தடுத்து வைத்திருந்தார்.
ஓர் உறையில் இரு கத்தி இருக்க முடியாது என்று அப்போது தலைமையும் மோடியை குஜராத்துக்கு போக வேண்டாமென்று கூறிவிட்டது. மோடி அத்வானியிடம் சென்று, ‘ நான் ஆரம்பித்த பள்ளியை பார்க்கவாவது மாதா மாதம் குஜராத் சென்றுவர அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டார். அப்படி அனுமதி வாங்கித்தான் போனார்.
ஆனால் இன்று குஜராத் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரைப் போல் நாமும் கஷ்டப்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும்.
காலையில் எடப்பாடி வாழ்க மாலையில் ஓ.பன்னீர் வாழ்க

நமக்கு மூன்று சீட் ஜெயிப்பது, நாலு சீட் ஜெயிப்பது இதெல்லாம் வேண்டாம்., நாம் 20% சதவிகிதம் ஓட்டு வாங்க வேண்டும். 2026 இல் 80 சீட் ஜெயிக்க வேண்டும். அதிமுக தேர்தல் கமிஷன், வழக்கு இதில் இருந்தெல்லாம் மீண்டு வரட்டும். அவங்க எங்க மீண்டு வர்றது? காலையில எடப்பாடி வாழ்க சாயந்தரம் ஓபிஎஸ் வாழ்கனு சொல்லிட்டு நம்மால் இருக்க முடியாது” என்று பேசிய அண்ணாமலை அதிமுகவோடு கூட்டணி இல்லை என்றும் தனித்தே போட்டி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
திமுகதான் முதல் எதிரி
அதே கூட்டத்தில் அவர் திமுக பற்றியும் பேசினார். “திமுகவினரோடு நாம் எக்காரணத்திலும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. பிசினஸ் ரீதியாக கூட. எந்த காரணத்துக்காகவும் காம்ப்ரமைசே கிடையாது. முதல் எதிரி அவங்கதான். திமுக காரங்க கல்யாணத்துக்குக் கூட நீங்க யாரும் போகக் கூடாது. தனிப்பட்ட எதிரியாவே அவங்களை பாக்கணும்.

ஒரு கம்யூனிஸ்ட் எம்..எல்.ஏ. நம்ம மாவட்ட தலைவரோட பிறந்தநாள் விழாவுல கேக் வெட்டிட்டு நிக்கிறாரு. இதை கன்னியாகுமரியில் இருக்கும் தொண்டன் பாத்தா என்ன நினைப்பான்? நான் ஐசரி கணேஷ் அம்மா மரணத்துக்கு போயிருந்தப்ப எதிர்பாராத விதமாக உதயநிதிய பார்த்தேன். அதை எவ்வளவு இஷ்யூ ஆக்கினாங்க? ஜோதிமணி எம்பி கூட என் சொந்தக்காரங்கதான். ஒரே கோவிலை சேர்ந்தவங்க. ஆனா எங்க அப்பா அம்மாகிட்ட கூட சொல்லிட்டேன் அவங்க கூட பேசக் கூடாதுனு.
திமுகவினர் இந்த ஆட்சி அதிகாரத்தை வச்சி நம்மளை முடக்கப் பார்ப்பாங்க. திருச்சியில் போன வாரம் நம்ம மாவட்ட தலைவர் உட்பட 9 பேரை ரிமாண்ட் பண்ணிருக்காங்க. நான் கமிஷனரிடம் பேசினேன். அவர் மேல இருந்து பிரஷர்னு சொல்றாரு. திமுகவை நாம தைரியமா எதிர்கொள்ளணும். அன்னூர்ல கூட பேசினேன். உதயநிதியை அமைச்சர் ஆக்க போறோம்குறாங்க. அவர் பிளே பாயாதான் இருப்பார்னு பேசினேன். அதனால திமுகவை விடாதீங்க” என்று பேசினார் அண்ணாமலை.
அதிமுகவோடு கூட்டணி இல்லை, திமுகவோடு எவ்வித சமரசமும் இல்லை என்பதே டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதில் முக்கியமானதாகும்.
–ஆரா