’கூட்டணி இல்லை’ : தவெக அறிக்கைக்கு அதிமுக தலைவர்கள் ரியாக்சன்!

Published On:

| By christopher

'No alliance': AIADMK leaders react to TVK statement!

அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று (நவம்பர் 18) தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், பாஜக மற்றும் திமுகவை நேரடியாக விமர்சித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக குறித்து அவர் விமர்சிக்காதது பற்றி பிற கட்சித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர்.

இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி வைக்கவுள்ளதாகவும் கருத்துகள் பரவின.

அதிமுக- தவெக கூட்டணி.. தவறானது!

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், ’தவெக – அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.

மேலும், ”வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி நேற்று பிரதான நாளிதழில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது” என்று அதில் தெரிவித்திருந்தார்.

நாங்கள் எப்போது அறிவித்தோம்?

தவெக அறிவிப்பு தொடர்பாக பொன்னேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ”அதிமுகவில் விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிகழ்வும் நடைபெறவில்லை. அது தவறான செய்தி.

விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைப்பதாக நாங்கள் எப்போது அறிவித்தோம்? கூட்டணியை இறுதி செய்ய இன்னமும் காலம் இருக்கிறது. பொதுச்செயலாளர் முடிவை உரிய காலத்தில் அறிவிப்பார்” என பொன்னையன் தெரிவித்தார்.

அதிமுக தலைமையில் அருமையான கூட்டணி அமையும்!

அதே போன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “2026 தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி, வெல்லப்போகும் கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமையும். கூட்டணி முடிவுக்காக எடப்பாடி பழனிசாமி, சரியாக காய் நகர்த்திக் கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புழல் சிறையில் ’வழக்கறிஞர்’ கஸ்தூரி… எப்படி இருக்கிறார்?

பீட்சா , பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை… சடலமான பரிதாபம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share