இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இன்று (நவம்பர் 19) அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஆட்சி அதிகாரம், அரசு இயந்திரம், பணபலம் எல்லாம் இருந்தும் அவர்களால் ஜெயலலிதாவின் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
எடப்பாடி தனியாக ஒரு சின்னத்தில் நின்று ஜெயித்து காட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
எடப்பாடி பழனிசாமியின் நிலை என்ன ஆகும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்” என்றார்.
அவரிடம் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், ” அதிமுக கட்சியே செயல்படாத நிலையில் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்தையே அவர் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.
இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது.
நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததை போல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா” என கேள்வி எழுப்பினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக மிகக் குறைவு இதனை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றும் தினகரன் தெரிவித்தார்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பேசிய அவர், “தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது.
இதனால் நான் திமுக கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள் என கிண்டலாகக் கூறினார். அரசு நல்லது செய்யும்போது ஒத்துக்கொள்ளவேண்டும். எதிர்கட்சி என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லக்கூடாது” என்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பியபோது, ” என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். மற்றவர்கள் மாதிரி வானத்துக்கும், பூமிக்கு தாவி குதிக்கமாட்டேன்.
2024 தேர்தலில் அதிமுக உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் வெற்றி பெறமுடியும். அது கூட்டணியாக இருந்தாலும் சரி, அதனால்தான் பன்னீர்செல்வம் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
தேசிய கட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து திமுகவை எதிர்க்கவேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் திமுக மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும்.
இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு தேவையானதை கேட்டுப்பெற முடியும்.
அதனால் நிச்சயம் கூட்டணிக்குச் செல்வேன். ஒருவேளை கூட்டணி அமையாவிட்டால், தனித்துப் போட்டியிடவும் தயார்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கலை.ரா
திகார் சிறையா, மசாஜ் பார்லரா?: ஆம் ஆத்மி அமைச்சரின் வீடியோ!
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு? – 6 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!