உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) அமைச்சராக பதவி ஏற்பதை ஒட்டி நேற்று, தமிழகத்தின் பல்வேறு அமைச்சர்களும் முன்னணி நாளிதழ்களை தொடர்பு கொண்டு முதல் பக்கத்தை தங்களது வாழ்த்து விளம்பரத்துக்கு ஒதுக்குமாறு புக் செய்து வைத்திருந்தனர்.
ஆனால் நேற்று பகலே அமைச்சர்கள் தரப்பில் இருந்து நாளிதழ் நிர்வாகங்களுக்கு போன் செய்து, ‘விளம்பரம் எதுவும் கொடுக்க கூடாதுன்னு கட்சியிலிருந்து சொல்லிட்டாங்க. அதனால் விளம்பரம் வேண்டாம்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.
வேறு நாளிதழ்களில் தான் விளம்பரம் கொடுக்க முடியவில்லை நமது கட்சி பத்திரிக்கையான முரசொலியில் கொடுக்கலாம் என பலரும் தயாரான போது தான்…
முரசொலியில் தன்னை வாழ்த்தி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் ஏதும் வரக்கூடாது என்று உதயநிதி ஸ்டாலினே தடை போட்ட தகவலும் அவர்களுக்கு தெரிய வந்தது.
இன்று (டிசம்பர் 14) வெளிவந்த முரசொலி பழைய மாதிரி இருந்திருந்தால் பக்கம் பக்கமாக நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு விளம்பரங்கள் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கும்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது பற்றி முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறதே தவிர ஒரு விளம்பரம் கூட திமுகவின் அதிகாரபூர்வபத்திரிகையான முரசொலியில் வெளியிடப்படவில்லை.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா விளம்பரம் மட்டுமே ஒன்பதாம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறதே தவிர 10 பக்க முரசொலியில் ஒரு கால் பக்க விளம்பரம் கூட உதயநிதிக்காக இன்று வெளிவரவில்லை என்பது புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
வேந்தன்