உயர் சாதி ஏழைகளுக்கான 10சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதலமைச்சர் திட்டவட்டமாக கூறிவிட்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
10சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று(நவம்பர் 12)நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “அனைத்துக்கட்சிகளும் ஒரே மாதிரியாக, சமூகநீதிக்கு எதிரான பொருளாதார அடிப்படையிலான 10சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்து உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்று அனைத்துக்கட்சி தரப்பிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும்போது தமிழக அரசு முழு உறுதுணையாக இருக்கும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
சமூகநீதிக் கொள்கையிலே, பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவருக்குமே ஒருமித்த கருத்து இருந்தது.
திமுகவும் சரி அதிமுகவும் சரி சமூக நீதிக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளாகவே இருந்தன.
ஆனால் தற்போதுள்ள அதிமுகவினர் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம், அதிமுகவில் இருக்கும் உட்கட்சிப் பிரச்சினையா அல்லது கொள்கையையே மாற்றி பாஜகவுடன் செல்லவேண்டும் என்ற எண்ணமா என்பது தெரியவில்லை.
பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 10சதவீத இட ஒதுக்கீடு என்பது நடைமுறைப்படுத்தப்படாது என்று முதலமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டார்” என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினருமே மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.
தந்தை பெரியாரின் கருத்தை ஏற்றுதான் நேருவும், அம்பேத்கரும் பொருளாதார அடிப்படை என்பதையே நிராகரித்துவிட்டார்கள் என்று கூறினார்.
கலை.ரா
அமித்ஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார் யார்?
ட்ரெண்டாகும் 70ஸ் கவர்ச்சி நாயகி!