நம்பர் 1 தமிழ்நாடு : கொளத்தூரில் மு.க.ஸ்டாலின்

முதல்வராக பதவியேற்கும் போது தமிழ்நாட்டை ’நம்பர் ஒன்’ மாநிலமாக உருவாக்குவேன் என்று கூறினேன் அதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 4) தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், அனிதா அச்சீவர்ஸ் அக்காடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்,

நம்முடைய திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை என்பதே கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். வளர்ச்சி என்பது. அனைவருக்குமான வளர்ச்சியாக இருந்திட வேண்டும். அந்த அடிப்படையிலே கல்வி என்பது எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும். அந்தக் கல்வி என்பது கிடைப்பதற்குத் தடை இருந்தால், அந்தத் தடையை உடைத்தாக வேண்டும்.

எந்தத் தடையும் அதற்கு இருக்கக் கூடாது. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் அரசு அமைகிறபோதெல்லாம் கல்விக்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகப் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம், திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியைப் பொறுத்தவரையில், ஏதோ நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னால் அல்ல, நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது, இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பகுதியிலே என்னைச் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தப் பொறுப்பை பயன்படுத்திச் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு என்னென்ன பணிகளை நிறைவேற்ற முடியுமோ அதை எல்லாம் நான் தொடர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

அதிலே குறிப்பாக இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட அதற்குரிய படிப்பினைப் படித்திட வழிவகை செய்யக்கூடிய நிலையில் இந்த அகடமியை நாம் தொடங்கினோம். அதுவும் யாருடைய பெயராலே? அனிதா என்கிற அந்த சகோதரியின் பெயராலே. ஏன் அனிதா என்ற பெயரை இந்த அச்சீவர்ஸ் அகாடமிக்கு சூட்டினோம் என்று கேட்டால், மருத்துவப் படிப்பு படித்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்.

பணியாற்ற வேண்டும். மருத்துவராக இருந்து சாதிக்க வேண்டும் என்கிற நிலையில் பல்வேறு கனவுகளோடு ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய ஒரு சகோதரி அடித்தட்டில் இருந்து படித்து மேலே வந்த அந்த சகோதரி, தகுதி திறமை போன்ற பசப்பு சொற்களுக்கு நீட் என்ற முலாம் பூசப்பட்டு தடையாக வந்த காரணத்தால், தான் கண்ட கனவு நிறைவேற முடியாத ஒரு சூழ்நிலைக்கு ஆளானார்.

தன்னுடைய மருத்துவக் கனவை அந்த சகோதரி இழந்தார். அந்த ஏக்கத்தின் காரணமாக அந்த சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என்பது நாட்டிற்கே நன்றாகத் தெரியும். அந்த சகோதரி அனிதாவினுடைய பெயரால் இந்த திறன் மேம்பாட்டு மையம் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் நாள் பெண்களுக்கான பயிற்சி மையமாக இது தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் Tally எனும் கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் நாள் ஆண்களுக்கான தனி பயிற்சி மையமும் மகளிருக்கான இலவசத் தையல் பயிற்சி மையமும் துவக்கி வைக்கப்பட்டது. இதுவரையில் இதுவரை 8 பேட்ச் மாணவிகள் இங்கு படித்துள்ளார்கள். அதாவது 662 மாணவிகள் இலவசப் பயிற்சி முடித்து Tally சான்றிதழும் மடிக்கணினியும் பெற்றிருக்கிறார்கள். அதேபோல் 4 பேட்ச்களைச் சார்ந்த 37 மாணவர்கள் இலவச பயிற்சி முடித்து சான்றிதழ்களும் மடிக்கணினியும் பெற்றிருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 969 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஒன்பதாவது பேட்ச் அதனுடைய தொடர்ச்சியாகத்தான் மாணவிகளுக்கும் ஐந்தாவது பேட்ச் மாணவர்களுக்கும். அதாவது Tally முடித்ததற்கான சான்றிதழையும், மடிக்கணினியும் நான் இங்கு வழங்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சியில் Tally ஒன்பதாவது பேட்சைச் சார்ந்த மாணவிகள் 81 பேர். ஐந்தாவது பேட்சைச் சார்ந்த 74 மாணவர்கள் என மொத்த 155 பேர் சான்றிதழும் மடிக்கணினியும் பெறுகிறார்கள்.

நான் பல முறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன்; இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருவதற்கான எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன் என்று ஆட்சி பொறுப்பேற்ற அன்றே குறிப்பிட்டுச் சொன்னேன். தேர்தல் முடிந்து. தேர்தல் முடிவுகள் எல்லாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிற போது, பெரும்பான்மை இடங்களில் நாம் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது.

நம்முடைய கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றுகளை நான் வந்து வாங்கிக் கொண்டு நேராக நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவினுடைய நினைவிடத்திற்கும் நம்முடைய உயிரோடு கலந்து இருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று அங்கே வணக்கம் செலுத்திவிட்டு மரியாதை செய்துவிட்டு. வெளியிலே வருகிறபோது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு.

“ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள், என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று என்னைக் கேட்டபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன். மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

அதோடு நிறுத்தவில்லை, வாக்களித்தவர்கள் பெருமைப்படத்தக்க வகையில், அவர்கள் என்னை பாராட்டக்கூடிய வகையிலே ஆட்சியை நடத்துவது மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்காமல் நாம் இருந்துவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும் என்று அப்போதே நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலேயே நம்பர் ஒன் சி.எம்., என்று அந்தப் பாராட்டை நான் பெற்றிருந்தாலும் அப்போதும் நான் சொன்னேன், நம்பர் ஒன் சி.எம்., என்று சொல்வதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்று நான் சொன்னேன், அது வந்திருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முதல்வர், முன்னாள் முதல்வருக்கு கொரோனா!

’விடுதலை’ பட விவகாரம்: கொந்தளித்த சோளகர் தொட்டி ஆசிரியர்!

No 1 cm now No 1 Tamil Nadu
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts