தமிழர்களின் உழைப்பில் செழிக்கும் என்எல்சி நிறுவனம் தேவையில்லை: அன்புமணி ராமதாஸ்

Published On:

| By Minnambalam

தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்எல்சி நிறுவனம் தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டிவரும் என்எல்சி அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கட்டுப்படியாகும் விலையையும் வழங்க மறுக்கிறது. இது பெரும் அநீதி.

நிலம் கொடுத்த மக்களுக்கு எந்த உரிமையும் வழங்க முடியாது; தமிழகத்திலிருந்து கிடைக்கும் எல்லா லாபத்தையும் வட இந்தியாவுக்கு கொண்டு செல்வோம் என்ற என்எல்சியின் கொள்கை, கிழக்கு இந்திய கம்பெனியின் கொள்கையை விட கொடூரமானது ஆகும்.

இதை என்எல்சி மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்எல்சி தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது.

நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட என்எல்சி நிறுவனம் தேவையில்லை. ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது.

மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பாதுகாக்க எத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கும் பாமக தயங்காது” என்று பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

நிலம் கொடுத்தவர்களுக்குத் தற்காலிக பணி… வட மாநிலத்தவருக்கு நிரந்தர பணியா? என்.எல்.சி குறித்து பன்னீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share