என்.எல்.சிக்காக நிலத்தை எடுத்துக்கொண்டு இழப்பீடு கொடுத்தால் அது அமைச்சர் செந்தில் பாலாஜி துறைக்கு சென்றுவிடும் என்று பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார். அதாவது அந்த பணம் டாஸ்மாக்கிற்கு சென்றுவிடும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே 2) என்எல்சி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைச்சர்கள், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் என்.எல்.சி தரப்பில் உயரதிகாரிகள், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காத நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் கலந்துகொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக நானாகத்தான் வந்து கலந்துகொண்டேன். இந்த கூட்டத்தில் எல்.என்.எல்.சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என ஒரு சில கருத்தை சொன்னார்கள். எங்களுடைய கருத்தை நான் பதிவு செய்து வந்துள்ளேன்.
என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்துக்கு தேவையில்லை என்று சொன்னேன். இதுகுறித்த காரணங்களோடு கடிதங்கள் கொடுத்திருக்கிறேன்.
மூன்று தலைமுறைகளாக என்.எல்.சி நிறுவனத்தால் உடல் சார்ந்து, மனம் சார்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்துமா, கேன்சர் போன்ற உடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
என்.எல்.சி நிறுவனம் வருவதற்கு முன்னதாக 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளது. நிலம் கொடுத்த ஒரு சிலருக்கு தவிர வேறு யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. கடைசியாக 1989ல் தான் நிரந்தர வேலை கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு கொடுத்த வேலை எல்லாம் தற்காலிக வேலைதான்.
என்.எல்.சி.க்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகிறேன். அந்தவகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தேன்.
மொத்தம் உள்ள 9 நிலக்கரி சுரங்கங்களில் 7 கடலூரில் உள்ளது. மற்ற இரண்டு தஞ்சை, அரியலூரில் இருக்கிறது. இந்த 9 சுரங்கங்களில் 3 நடைமுறையில் இருக்கிறது. சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ சுரங்கம் 2 பயன்பாட்டில் இருக்கிறது.
சட்டமன்றம் நிறைவடைந்த பிறகு என்.எல்.சிக்கு நிலம் எடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தும் கிராமங்களான கீழ்வளையமாதேவி, மேல்வளையமாதேவி, கரிவெட்டி ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்றன.
சட்ட விரோதமாக நிலத்தை கையகப்படுத்துகின்றனர். இதையெல்லாம் கூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். நல்ல முடிவை எடுப்பதாக தலைமை செயலாளர் சொல்லியிருக்கிறார். எங்களுடைய நோக்கமே இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் தற்போது 35 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி இருக்கிறது. கோடை காலத்தில் தற்போது 18 ஆயிரம் மெகா வாட் தேவைப்படுகிறது. இரண்டு மடங்கு உற்பத்தி அதிகமாக இருக்கும் போது என்.எல்.சி கொடுக்கிற மாசடைந்த மின்சாரம் தேவையில்லை.
உலகம் முழுவதும் நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையங்களை மூடப்பட்டு வருகின்றன. கால நிலை மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலநிலை கொள்கையை அறிவித்திருக்கிறார். 2024க்குள் ஜீரோ கார்பன் எமிஷனை அடைவோம் என்று கூறுகிறார். அப்படி இருக்கும்போது குளோபல் வார்மிங்கிற்கு உடந்தையாக இருக்கும் என்.எல்.சிக்கு எதற்கு தமிழக அரசு உடந்தையாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டத்துக்கு அழைப்பே விடுக்காத நிலையில் நீங்கள் ஏன் கலந்துகொண்டீர்கள் என்ற கேள்விக்கு, “இது என்னுடைய ஆதங்கம். இன்றைய கூட்டத்தில் விவசாயத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே விவசாயிகள் சார்பில் நான் கலந்துகொண்டேன்” என்றார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சி.வி.கணேசன் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, “இவர்கள்தான் எப்படியாவது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று இருக்கிறார்கள். வேளாண் துறை அமைச்சர் வேளாண் துறையை பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆட்சியர்தான் ரொம்ப மோசமாக செயல்படுகிறார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “இன்று நிலத்துக்கு முதலாளியாக இருக்கிறேன். இந்த நிலத்தை கொடுத்துவிட்டு நான் கூலி வேலைக்கு போக வேண்டுமா. நில உரிமையாளர்கள் 10 விழுக்காடுதான் இருக்கின்றனர். மற்றவர்கள் கூலி தொழிலாளர்கள். அவர்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்டால் பதில் சொல்லவில்லை. இழப்பீடாக ஒரு கோடி கொடுத்தால் தாயை விற்றுவிடுவீர்களா?. மின்சாரம் கிடைக்கிறது என்று நிலத்தை அழித்தால் நாளை சோறு கிடைக்காது. இழப்பீட்டு தொகை 6 மாதத்துக்குள் செலவாகிவிடும்.
இந்த நிலத்திற்கு இழப்பீடாக எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அது முருகன் பெருமாள் பெயர் கொண்டவர் துறைக்கு சென்று விடும். அதாவது செந்தில் பாலாஜி துறைக்கு சென்று விடும் என விமர்சித்தார்.
பிரியா
அரசுப் பேருந்து நடத்துனர் செய்த நல்ல விஷயம்!
ஆளுநரை சந்தித்தது ஏன்?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்