தமிழகத்தில் நெய்வேலியில் இயங்கிவரும் என்.எல்.சி (இந்தியா லிமிடெட் நிறுவனம்), தற்போது மூடப்படும் அபாயத்தை நோக்கி செல்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசும், ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசும் என்ன செய்யப் போகிறது?
தமிழகத்தில் 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் என்.எல்.சி சுரங்கம், அப்போதைய முதல்வர் காமராஜர் முயற்சியாலும் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆதரவாலும் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனல் மின் நிலையமும் தொடங்கப்பட்டது.
அந்த சுரங்கங்கள், சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 என விரிவடைந்தது. அதுபோல், அனல்மின் நிலையமும் 1 மற்றும் 2 ஆக விரிவாக்கம் பெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மின்சார சப்ளை செய்துவரும் என்.எல்.சி நிறுவனம், தமிழக அரசுக்கு மிகக் குறைவான கட்டணத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறது.
சுமார் 23 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கடும் உழைப்பால் ஐந்தாயிரம் மெகாவாட் வரையில் உற்பத்தி செய்துவந்த என்.எல்.சி அனல்மின் நிலையம், கடந்த 2021ஆம் ஆண்டு 2,606.42 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதில் மத்திய அரசுக்குச் செலுத்தக்கூடிய அனைத்துவிதமான வரிகள் 1,342.88 கோடி ரூபாய் போக, நிகர லாபம் 1,263.54 கோடி ரூபாய்.
அப்படிப்பட்ட லாபகரமான நிறுவனம் தற்போது நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை 11 ஆயிரமாகக் குறைத்துள்ளதுடன், பழுப்பு நிலக்கரியையும் குறைத்துள்ளது. இதனால், தற்போது ஆயிரத்திற்கும் குறைவான மெகாவாட் மின்சார உற்பத்தியையே செய்துவருகிறது. இதனால் என்.எல்.சி. நிறுவனம் மூடப்படும் அபாயத்தை நோக்கிச் செல்கிறது.
என்.எல்.சி நிறுவனம் மூடப்படும் அபாயத்துக்குச் செல்ல இருப்பது குறித்து சிஐடியூ செயலாளர் வேல்முருகனிடம் பேசினோம். “நிலக்கரி இருந்தால்தான் தர்மல் பாய்லர் ஓடும் மின்சாரம் கிடைக்கும். தற்போது கைவசம் இருந்த பழுப்பு நிலக்கரி குறைந்துவிட்டது. கைவசம் இருக்கும் நிலக்கரியை வைத்து முழுமையாக ஓட்டினால் டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிடும்.
அதன் பிறகு முழுவதுமாக நிறுத்த வேண்டிய நிலை வரும். இவ்வளவு பெரிய அபாயத்தைத் தெரிந்திருந்தும் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கின்றன. இதற்காக பொதுமக்களிடமிருந்து நிலத்தைப் பெறுவதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. மக்களும் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலம் கொடுக்க முன்வரவில்லை. அவர்கள் கேட்கும் நியாயமான பிரச்சினைக்கு, அதாவது வேலை மற்றும் நியாயமான விலை நிர்ணயத்துக்கு எந்த அரசும் உறுதி கொடுக்க முன்வரவில்லை.
கடந்த காலங்களில் என்.எல்.சி நிறுவனத்தில் கிடைத்த லாபத்தை வைத்து பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற வட மாநிலங்களில் நிலக்கரி எடுத்து மின்சாரம் உற்பத்திசெய்து என்.எல்.சி நிறுவனத்தைவிட குறைந்த லாபத்தை எடுத்துவருகிறார்கள்.
அதுபோக, அனல்மின் நிலையத்துக்கு அரியலூர் மாவட்ட மக்கள் நிலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால், ஜெயங்கொண்டம் பகுதியில் 5000 ஆயிரம் கோடியில் வரவிருந்த சுரங்கமும் அனல்மின் நிலையமும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.
மேலும், சமீபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 300 பொறியாளர்களை என்.எல்.சி நிறுவனத்திற்கு வேலைக்கு எடுத்தார்கள். அந்த வேலையைத் தமிழகத்தில் நிலம் கொடுத்தவர்களுக்குக் கொடுத்திருந்தால் தற்போது நிலம் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் மத்திய அரசு இதில் திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது.
என்.எல்.சி நிறுவனம் மூடப்பட்டால், இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை, வடமாநிலங்களுக்கே மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், இதை மாநிலத்தில் ஆட்சி நடத்துபவர்கள் புரிந்துகொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர்” என்றார்.
இதுதொடர்பாக என்.எல்.சி மூத்த அதிகாரி ஒருவர், “கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நிலக்கரி சுரங்கத்துக்கு நிலம் எடுத்தாக வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட ஆட்சியராக வரக்கூடியவர்கள் இதற்கான சூழலை புரிந்துகொள்ளாமல், இது ஏதோ தனிநபர் சம்பந்தப்பட்ட சொத்து என நினைத்துக்கொண்டு அலட்சியமாகச் சென்றுவிடுகிறார்கள்.
கலெக்டர்தான் உண்மை நிலைமையைத் தலைமைச் செயலர் மற்றும் ஆட்சியாளர்களிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்வதில்லை. ஏக்கருக்கு 23 லட்ச ரூபாய் கொடுக்கிறோம் என்று மத்திய அரசு ஆர்&ஆர் என்கிற ஒரு பாலிசியை கொண்டுவந்தது.
இதுதொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா.ராசேந்திரன், அதிமுக எம்.எல்.ஏ அருள்மொழித்தேவன் மற்றும் பாண்டியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் மற்றும் நிலம் கொடுக்கும் விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரூ.23 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் வரை பணமும், முதலில் ஆயிரம் பேருக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் வேலையும் கொடுப்பதாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதுபோல் பாமகவும், நிவாரணம் அதிகம் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறது.
என்றாலும், தற்போது அவசரமாக 80 ஹெக்டர் நிலம் எடுத்தாக வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி எடுக்கவில்லையென்றால், 2023 ஆம் ஆண்டு புது வருடத்தில் சுரங்கத்தையும் தர்மலையும் மூடும் நிலைமை ஏற்படும். இதனால், தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும்” என்றார், தெளிவாக.
இதுகுறித்து நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா ராசேந்திரன், ”கடந்த 10 ஆண்டுக் காலம் ஆட்சியை நடத்திய அதிமுகவின் அலட்சியத்தால் தற்போது நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் யாரையும் குறை சொல்லாமல் கவனமாகச் செயல்பட்டாக வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் தீவிரமான ஆலோசனைகள் செய்துவருகிறார். நல்ல தீர்வு கிடைக்கும்” என்றார், நம்பிக்கையுடன்.
வணங்காமுடி
கமலாலயத்தில் அமித்ஷா நடத்திய ஆலோசனை!
மோடி-எடப்பாடி-ஓபிஎஸ்: அந்த இருபது நிமிடங்களில் நடந்தது இதுதான்!
Comments are closed.