கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனம், நேற்று முன் தினம் விளை பயிர்களை அழித்து கால்வாய் அமைத்திருக்கிறது.
சாகுபடிக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
“களை எடுக்கும் போது ஒரு பயிரை மிதித்தாலே அவ்வளவு வலிக்கும். ஆனால் இயந்திரத்தை கொண்டு வந்து நிறுத்தி பயிர்களை அழித்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பயிர்கள் அழிக்கப்பட்டது பற்றி காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன் நம்மிடம் கூறுகையில், “என்.எல்.சி நிறுவனம் நிலம் ஆக்கிரமிப்பு செய்வது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
ஆனால் விவசாயிகள் உயிராக நேசிக்கக் கூடிய நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் ஒரு மாத காலம் கூட பொறுத்துக்கொள்ளாமல் அவசர அவசரமாக நெற்பயிரை அழித்தது கண்டிக்கத் தக்க செயல்” என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதனிடையே பாமக நேற்று என்.எல்.சி.யை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி இன்று சென்னை – கும்பகோணம் சாலையில், நெய்வேலி நுழைவாயிலான ஆர்ச்கேட் பகுதியில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போது போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து நாம் போலீஸ் தரப்பில் கேட்டபோது, “என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஒரு நாளுக்கு முன்பு பாமக அறிவித்ததும், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்பி ராஜாராம் ஆகியோர் ஆலோசனை செய்தனர். இதையடுத்து மூன்று மாவட்ட எஸ்.பி மற்றும் போலீசார் உட்பட சுமார் 1300 பேர் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டனர்.
இன்று ஐஜி கண்ணன், டிஐஜி மற்றும் எஸ்.பியிடம் பாமகவினர் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளனர். அதற்கு போலீசார் இடம் கொடுத்துவிடக் கூடாது. அவர்களே வேகமாக வந்தாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முடிந்தளவுக்கு பொறுமையை கையாளவேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இன்று காலை பாமகவினர் சென்னை – கும்பகோணம் சாலையில் உள்ள நெய்வேலி ஆர்ச்கேட் நோக்கி வருகை தந்தனர். என்.எல்.சி நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே நுழையாத அளவுக்கு பார்த்துக் கொண்டனர்.
சரியாக 12 மணியளவில் அன்புமணி ராமதாஸ் வருகைத் தந்தார். ‘எங்களைப் பற்றித் தெரியும், நாங்கள் கை வைத்தால் என்ன ஆகும் என்றும் தெரியும். நாங்கள் அமைதியான முறையில் போராட விரும்புகிறோம். மீண்டும் நிலம் எடுப்பு தொடர்ந்தால் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபடுவோம்’ என்றார் அன்புமணி ராமதாஸ்.
மதியம் 1 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்ததும் என்.எல்.சி.க்குள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், போலீசார் மீது தண்ணீர் பாக்கெட்டை பீய்ச்சி அடித்தும், கற்களை வீசியும் தாக்கினர்.
அப்போது கலவரம் பெரிதாகாமல் தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் அன்புமணி மற்றும் வழக்கறிஞர் பாலுவுடன் பேசினர். தொடர்ந்து போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்ற போது வாகனத்தை மறித்துகொண்டு. ‘அன்புமணியை விடுதலை செய்’ என்று கோஷமிட்டனர்.
அதோடு போலீசாரையும் கற்களால் தாக்கினர். வேறு வழியில்லாமல் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, கண்ணீர் புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.
அன்புமணி, பாலு உட்பட 242 பேரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து அவர்களது சுயவிவரங்களை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு மாலை 6.30 மணியளவில் விடுதலை செய்தனர்.
இதனிடையில் கடலூர் மாவட்ட போலீசார் செல்மூலமாகவும், கேமரா மூலமாகவும் கலவர காட்சிகளை பதிவு செய்தனர். அதனை தனி டீம் போட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை இன்று இரவு வேட்டையாட அடையாளம் கண்டு வருகின்றனர்” என்றனர் காவல் துறை வட்டாரத்தில்.
இந்த கலவரத்தை பற்றி பாமக அமைப்புத் தலைவர் பழ தாமரைக் கண்ணனிடம் கேட்டோம்.
“ஒரு கோடி கொடுத்தாலும் நாங்கள் விவசாய நிலத்தில் ஒரு செண்ட் கூட விட்டுக்கொடுக்கமாட்டோம். கூட்டுக் களவாணிகளான மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றுகிறது.
என்.எல்.சி.க்கு நிலம் வேண்டுமென்று கட்டாயப்படுத்தி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தனியார் நிறுவனமான அதானியிடம் ஒப்படைக்க மாநில அரசும், மத்திய அரசும் துடியாய் துடித்து வருகிறது.
இதனை நாங்கள் கேட்பதால் எங்கள் மீது தடியடி நடத்துகிறது தமிழக காவல்துறை” என்றார் பழ தாமரைக்கண்ணன்
என்.எல்.சி நிறுவனத்தின் பிஆர்ஓ சையது காதரிடம், விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயிர்களை அழிப்பது நியாயமா என்று கேட்டோம்.
இதற்கு அவர், “நாங்கள் யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. 10 வருடத்திற்கு முன்பு நாங்கள் வாங்கிய நிலத்தில் தான் என்.எல்.சியில் இருந்து வெளியேறும் தண்ணீரை மாற்று வழியில் கொண்டு செல்ல 900மீ நீளமும், 10மீ அகலத்துக்கும் கால்வாய் வெட்டி எடுத்தோம். நாங்கள் வாங்கிய நிலத்தில் அவர்கள் பயிர் செய்துகொண்டு, எங்கள் நிலம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்.
மாற்றுக் கால்வாய் உருவாகவில்லை என்றால் என்.எல்.சியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் சுரங்கத்துக்குள் சென்று பெரிய அபாயத்தை உருவாக்கும்.
தற்போது 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 57 சதவிகிதம் மிக மிக குறைந்த விலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது.
இங்கு நிலக்கரி எடுப்பது பாதிக்கப்பட்டால் மின்சாரம் தடைபடும். இதனால் தமிழக அரசு பல மடங்கு விலை கொடுத்து வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதையெல்லாம் மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
என்.எல்.சி நிலம் எடுப்பு, பாமக போராட்டம், போலீசார் குவிப்பு என நெய்வேலி பகுதி பரபரப்பாக காணப்படுவதால் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
வணங்காமுடி, பிரியா
“அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம்” – உதயகுமார்
என்.எல்.சி விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!