ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்: பீகார் அரசியலில் பரபரப்பு!

அரசியல்

பீகார் அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி.

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி,க்களுடன் நிதிஷ்குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?என்பது குறித்து அவர் கருத்து கேட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர ஆலோசனை

இதேபோன்று பீகாரில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் தான் ஆளுநரை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக – ஜேடியு கூட்டணி உடைகிறது

பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆர்.ஜே.டி உடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தற்போது ஆதரவும் தெரிவித்து இருக்கிறது. இதனால் பீகாரில் விரைவில் ஜக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி முறியும் சூழல் உருவாகியுள்ளது.

நிதிஷ்குமார் அதிருப்தி

பீகாரில் மறைமுகமாக ஆட்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக முக்கிய தலைவர்கள் ஈடுபட்டதால் நிதிஷ்குமார் அதிருப்தியில் இருந்து வருகிறார். மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சியைப் பிடித்தது போன்று பீகாரிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயன்று வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அதிருப்தி காரணமாகவே அண்மையில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. குடியரசுத் தலைவரின் பிரிவு உபசார விழாவை கூட நிதிஷ்குமார் புறக்கணித்தார்.

பாஜக அமைச்சர்கள் ராஜினாமா?

பாஜகவுக்கும் ஜக்கிய ஜனதா தளத்துக்கும் நீண்ட நாளாகவே பனிப்போர் நடந்து வரும் சூழலில் நிதிஷ்குமார் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதால் இந்த கூட்டணி கலையப் போகிறது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் தலைமையில் பாஜக அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கட்சியைச் சேர்ந்த 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கலை.ரா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதிங்க…

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.