தேஜஸ்வியுடன் சந்திப்பு… மீண்டும் பல்டியா? மோடிக்கு நெருக்கடியா? நிதீஷ் விளக்கம்!

அரசியல்

பிகாரில் மீண்டும் அரசியல் மாற்றம் ஏற்படுமா? நிதீஷ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையிலான நட்பு மீண்டும் முறியப் போகிறதா? இந்த பரபரப்பு தொடர்பான கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 6) அவற்றுக்கு பதிலளித்துள்ளார் பிகார் முதல்வர் நிதீஷ்குமார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது  செப்டம்பர் 4 ஆம் தேதியன்று முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தார்.

ஏற்கனவே இருவரும் அரசியல் கூட்டாளிகளாக இருந்தவர்கள்.  பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமார், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் திடீரென மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 இடங்களே வெற்றி பெற்ற நிலையில்,  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் மோடி ஆட்சி இப்போது நடக்கிறது.

இந்த நிலையில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, பொருளாதார பேக்கேஜ் உள்ளிட்ட நிதிஷ்குமாரின் கோரிக்கைகளுக்கு மோடி அரசு இன்னும் முழுமையாக செவி சாய்க்கவில்லை.

இந்த சூழலில்தான், செப்டம்பர் 4 ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமாரை இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பை அடுத்து, பாட்னா முதல் டெல்லி வரை அரசியல் நிலநடுக்கம் போன்ற சூழல் ஏற்பட்டது.  முதல்வருக்கும், முன்னாள் துணை முதல்வருக்கும் இடையே திடீர் சந்திப்பு ஏன்? மீண்டும் பல்டியடிக்கப் போகிறாரா நிதீஷ் என்ற கேள்விகள் பரபரப்பாக எழுந்தன.

ஆனால் தேஜஸ்வி யாதவ் இதற்கு விளக்கம் அளித்தார்.

“காலியாக உள்ள இரண்டு தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு உரியவர்களை நியமனம் செய்வதற்கான கூட்டம் நடந்தது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கலந்துகொண்டேன். இவ்வளவுதான்.

இது தவிர, ஜாதிவாரி கணக்கீட்டிற்குப் பிறகு அதிகரித்துள்ள இடஒதுக்கீட்டின் வரம்பை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது குறித்தும் முதலமைச்சருடன் கலந்துரையாடினேன்.  இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது என்றார் முதல்வர்” என தன்னுடைய சந்திப்புக்கு விளக்கம் கொடுத்தார் தேஜஸ்வி யாதவ்.

ஆனால் தேஜஸ்வியின் விளக்கத்துக்குப் பின்னரும் சமூக தளங்களில் பரபரப்பு குறையவில்லை.

“நினைத்திருந்தால் தேஜஸ்வி அந்த சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம். இதன் மூலம் நிதிஷ்குமார் மீண்டும் மகா கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று ஆர்.ஜே.டி. கட்சியினரே தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல,  நேற்று  (செப்டம்பர் 5) பாட்னாவைச் சேர்ந்த  ஷைலேந்திர யாதவ் என்ற பத்திரிகையாளர்  சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். நிதிஷும் லாலுவும் சந்திக்கும் காட்சிகளை வெளியிட்டு,  “இன்று நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் இல்லத்திற்கு வந்து சந்தித்து பேசினார்.  3-4 நாட்களுக்குள் நிதிஷ் மற்றும் தேஜஸ்வியின் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்” என்று சொல்ல மேலும் பற்றிக் கொண்டது.

 

ஆனால் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை பற்றி விசாரிக்கையில்,  இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. பிகாரில் மகா கூட்டணி ஆட்சி இருந்தபோது. 5 செப்டம்பர் 2022 அன்று லாலு யாதவைச் சந்திக்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராப்ரி இல்லத்திற்குச் சென்றிருந்தார். அந்த வீடியோவைத்தான் இப்போது பரப்புகிறார்கள்.

இந்த திக் திக் சூழலில்தான் மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா இன்று (செப்டம்பர் 6) பிகார் தலைநகர் பாட்னாவுக்கு இரு நாள் பயணமாக வந்தார்.

தனது  அரசியல் நிலைப்பாட்டின் மீது பலத்த சந்தேகங்கள் எழுந்திருப்பதால் நட்டாவை பாட்னாவில் வைத்துக் கொண்டே நிதிஷ்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

”நாங்கள் அவர்களுடன் (ஆர்ஜேடி) இரண்டு முறை சென்றோம். அந்தத்  தவறு ஏற்கனவே நடந்தது. இனி அது நடக்காது. இனிமேல் போக மாட்டேன். பிகாரில் பாஜகவும்,  ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து பல பணிகளை செய்து வருகிறோம். பாஜகவுடன் தான் தொடர்ந்து இருப்போம்” என்று விளக்கம் அளித்துள்ளார் நிதிஷ்.

-வேந்தன்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வார்டன்னா அடிப்போம்… அப்டேட் குமாரு

ஆஸ்திரேலியாவில் தலைமறைவா? – மகா விஷ்ணு வெளியிட்ட வீடியோ!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *