Nitish kumar takes oath 9th time

பச்சோந்தியை தோற்கடித்த ‘பல்டி’ குமார்: 9 ஆம் முறை முதல்வரான கதை!

அரசியல்

Nitish kumar takes oath 9th time

“பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதை விட இறப்பேன்” என்று நிதிஷ் குமார் கூறிய ஒரு வருடத்திற்குள், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9 ஆவது முறையாக பிகாரின் முதல்வராகியுள்ளார் நிதிஷ்குமார்.

ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் வகித்து வந்த முதல்வர் பதவியை நேற்று (ஜனவரி 28) காலை ராஜினாமா செய்த அவர், நேற்று மாலை பாஜக ஆதரவோடு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பாஜகவுக்கு எதிராக, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவரான நிதிஷ், இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பிகார் தலைநகர் பாட்னாவில் நடத்தினார். ஆனால், இந்தியா கூட்டணியை அமைத்துக் கொண்டே அவர் பாஜகவுடன் திரை மறைவில் பேரம் பேசி வந்திருப்பது இப்போது இந்தியாவுக்கே தெளிவாகியிருக்கிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக நிதிஷ்குமார் அரசியல் வாழ்வில் பதவிக்காக எப்படி எப்படியெல்லாம் தனது அரசியல் பாதையில் யு டர்ன் போட்டிருக்கிறார் என்பதை இதோ பார்க்கலாம்…

1970-களின் மத்தியில் எமர்ஜென்சி எதிர்ப்பு போராட்டத்தின் போது பொது வாழ்வில் நுழைந்த நிதிஷ், 1985-இல் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டார். ஜனதா தளம் கட்சியிலிருந்து பிகார் சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9 ஆண்டுகள் கழித்து நிதிஷின் முதல் திருவிளையாடல் தொடங்கியது. 1994-இல் ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி ஒரு புதிய அரசியல் அமைப்பான சமதா கட்சியை – மூத்த சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் இணைந்து உருவாக்கினார். 1996-இல், அவர் சமதா கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அப்போது வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவராக உருவெடுத்தார்.

1998 மற்றும் 1999 அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கான மத்திய அமைச்சரானார் நிதிஷ். பாஜக ஆதரவுடன் 2000-ஆம் ஆண்டு முதல் முறையாக பிகார் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும், பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

2003 ஆம் ஆண்டில் சமதா கட்சி, சரத் யாதவ் தலைமையிலான ஜனதா தளம் பிரிவுடன் இணைந்து, ஜனதா தளம் (யுனைடெட்) அதாவது ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கியதில் நிதிஷ் முக்கிய பங்கு வகித்தார்.
ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் கூட்டணி வைத்து 2005 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிகார் முதல்வராக இரண்டாவது முறை பதவியேற்றார். 2010 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணியோடு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றார் நிதிஷ்.

வாஜ்பாய் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தூணாக இருந்த நிதிஷ் குமார்… 2013 ஆம் ஆண்டு பாஜகவின் 2014 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி என்ற அறிவிப்பால் அதிருப்தியடைந்தார். நீண்ட காலம் பங்கு வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2013 ஆம் ஆண்டு விலகினார் நிதிஷ்.

“எனது அரசியல் வாழ்வு முழுவதும் மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்தியே வந்திருக்கிறேன். மோடி பிரதமர் வேட்பாளர் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று அப்போது கூறினார் நிதிஷ். பிகார் முதல்வராக தொடர்ந்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் நிதிஷ் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியைச் சந்தித்த பிறகு, தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகினார். அப்போது ஜித்தன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.

2015 பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் முதல்வராக நான்காவது முறை பதவியேற்றார் நிதிஷ்.

Nitish kumar takes oath 9th time

2015 பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைக் கூட்டாக எதிர்கொள்ள ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் மகாகத்பந்தன் என்ற மகா கூட்டணியை நிதிஷ் உருவாக்கினார். பெரும் கூட்டணி வெற்றி பெற்று, முதல்வராக ஐந்தாவது முறையாக நிதிஷ் பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார்.

2017 ஆம் ஆண்டு, தனது கூட்டணிக் கட்சித் தலைவரும் துணை முதல்வருமான தேஜஸ்வி மீது ஊழல் புகார்கள் வரவே, அவரை பதவி விலகச் சொன்னார் நிதிஷ்குமார். இதற்கு தேஜஸ்வி மறுக்கவே கூட்டணியில் இருந்து விலகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்படியே பழைய கூட்டாளி பாஜகவோடு சேர்ந்தார் நிதிஷ் குமார். மீண்டும் ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

அந்த ஆட்சி முடிவில் 2020 சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது பாஜக கூட்டணியோடுதான் தேர்தலை சந்தித்தார் நிதிஷ். 2020 சட்டமன்றத் தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்திருந்தாலும், கூட இருந்தே நிதிஷுக்கு பெரும் குழி பறித்தது பாஜக.

அதாவது அந்தத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சியை நிதிஷ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்க வைத்தது பாஜக. இதனால் பாஜகவின் ப்ளான் வெற்றியடைந்தது. அதாவது 2020 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நிதிஷ் கட்சியோ வெறும் 43 இடங்களிலேயே வெற்றி பெற்றது. காரணம், பாஸ்வான் மகனை வைத்து பாஜக ஆடிய ஆட்டம்தான். லாலு மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது. இருந்தபோதும் பாஜக கூட்டணியோடு நிதிஷ் ஏழாவது முறையாக முதல்வராக தொடர்ந்தார்.

ஆனால் திரைமறைவில் நிதிஷுக்கு பல நெருக்கடிகளை கொடுத்தது பாஜக. இதனால் 2022-இல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், “பாஜக என் கட்சியை உடைக்கத் திட்டமிட்டது” என்று குற்றம் சாட்டினார்.

அப்போது 2015 இல் தான் உருவாக்கிய மகாகத்பந்தனை மீண்டும் உருவாக்கினார் நிதிஷ். பாஜக தயவால் தான் வகித்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு… தேஜஸ்வி யாதவ், காங்கிரசோடு கை கோர்த்து 2022 ஆம் ஆண்டு எட்டாவது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

Nitish kumar takes oath 9th time

18 மாதங்களுக்குள் மீண்டும் தேஜஸ்வி யாதவுடன் ஏற்பட்ட பிரச்சினைகளால் இப்போது பழைய படி பாஜகவோடு கை கோர்த்துவிட்டார் நிதிஷ். 9 ஆவது முறையாக மீண்டும் முதல்வர் பதவியேற்றுள்ளார் நிதிஷ்.

’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்…, கிழவனை தூக்கி மனையில் வை’ என்று தமிழ்நாட்டில் பழமொழி சொல்லுவார்கள். அதுபோல யாருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய முதல்வர் பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற ஒற்றைக் கொள்கையின் அடிப்படையிலேயே தனது அரசியல் வாழ்வின் அநேக காலத்தை கழித்திருக்கிறார் 72 வயதான நிதிஷ்குமார்.

நிதிஷ் அடிக்கடி பல்டியடிப்பதைப் பற்றி, லாலு பிரசாத் யாதவ்தான் இவரை  ‘பல்டு ராம்’ என்று கிண்டலாக அழைத்தார். அதாவது பல்டியடித்துக் கொண்டே இருப்பவர் என்ற பொருளில் லாலு அவ்வாறு அழைத்தார். ஊடகங்கள் பல்டி மாமா என்று அழைத்தன. இப்போது அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் நிதிஷ்.

Nitish kumar takes oath 9th time

நிதிஷ்குமாரின் இந்த லேட்டஸ்ட் தாவல் பற்றி காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவிக்கையில்,
“நிதிஷ் குமாரின் முடிவால் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 2024 தேர்தலில் நிதிஷ் குமாருக்கும் டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்கும் பிகார் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

இந்த நாடகம் முழுவதையும் பிரதமர் மோடி தான் உருவாக்கியுள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் வெற்றியால் மோடி திகைத்து நிற்கிறார். அதனால்தான் இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றுகிறார். நிதிஷைப் போன்ற சந்தர்ப்பவாத தலைவர்  யாரையும்  நான் பார்த்ததில்லை.  பச்சோந்தியோடு போட்டி போட்டால் ஜெயிக்கக் கூடியவர் நிதிஷ்” என்று சாடியுள்ளார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமராஜ்யம் என்று காந்தி சொன்னதும், இந்துத்துவம் சொல்வதும் ஒன்றா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Nitish kumar takes oath 9th time

+1
2
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *