2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று, ‘ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியை’ உருவாக்க பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
யார் இவர் – இன்ஜினியரிங் பாபு – முதல்வர்!
தற்போது 72 வயதாகும் நிதிஷ் குமார், 1951ஆம் ஆண்டு பிகார் மாநிலம் பக்தியார்பூர் பகுதியில் பிறந்தார். பிகார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த அவர், பிகார் மின்சார வாரியத்தின் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
அப்போது அவர் ‘இன்ஜினியரிங் பாபு’ என்று அழைக்கப்பட்டார். இப்போதும் பிகாரில் கிராமப்புரங்களில் வசிக்கும் மக்கள் அவரை இன்ஜினியரிங் பாபு என்றே அழைக்கின்றனர்.
கல்லூரி படிப்பின் போதே மாணவர் அரசியலில் ஈடுபட்ட நிதிஷ் குமார், அரசு பணியில் இருந்து விலகி 1974ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் பங்குகொண்டு தீவிர அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து, சத்யேந்திர நரேன் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் இருந்தும் விலகி சமதா கட்சியில் செயல்பட்டார்.
1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஹர்நாட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிதிஷ் குமார் மீண்டும் 1985ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் நிதிஷ் குமார் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதையடுத்து எம்.பி.தேர்தலில் கவனம் செலுத்தினார். 1996ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனது மட்டுமின்றி ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அடுத்தது பிரதமராக இருந்த வாஜ் பாய் ஆட்சி காலத்தில் வேளாண் துறை அமைச்சராகவும் இருந்தார்.
தான் ரயில்வே அமைச்சராக இருந்த போதுதான் தட்கல் முறை, முன்பதிவு டிக்கெட் முறை உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார். இதையடுத்து மாநில அரசில் கவனம் செலுத்துவதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்
7 நாளில் முடிந்த முதல்வர் கனவு
2000ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நிதிஷ் குமார். முதன்முறையாக அவருடைய முதல்வர் கனவு நனவாகியது. ஆனால் ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.
பிகார் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 151 இடங்களையும், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 159 இடங்களையும் பிடித்தன. பெரும்பான்மை 163 இடங்கள் என்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.
2003 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். அப்போது பாஜக நிதிஷ் குமாருடன் கூட்டணியில் இருந்தது.
தொடர்ந்து 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் முதல்வரானார். பின்னர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தெளிவாகத் தெரிந்தவுடன் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார்.
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படு தோல்வியை அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக்கினார். ஆனால் நிதிஷ் குமாருக்கு எதிராகவே மாஞ்சி திரும்பியதால், ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் நிதிஷ் குமார். இதில் பெரும்பான்மை இல்லாததால் மாஞ்சி ராஜினாமா செய்தார். தொடர்ந்து முதல்வரானார் நிதிஷ் குமார்.
இதையடுத்து அடுத்த ஆண்டே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பிகார். இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் உள்ளூர் கட்சிகளுடன் கைகோர்த்து மெகா கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார். ஆனால் இந்த கூட்டணி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்து 6ஆவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அப்போது பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. குறைவான இடங்களில் வெற்றி பெற்றாலும் 7ஆவது முறையாக முதல்வரானார் நிதிஷ் குமார்.
இந்த கூட்டணியும் தொடரவில்லை. ஆட்சி அமைந்தது முதல் பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. பாஜக தங்கள் கட்சியை உடைத்து ஆட்சி அமைக்க பார்க்கிறது. அது ஒருபோதும் நடக்காது என்று கூறி 2022ல் பாஜகவில் இருந்து விலகினார் நிதிஷ்குமார்.
அடுத்து காங்கிரஸ், ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்து 8ஆவது முறையாக முதல்வரானார். அதன்படி 22 ஆண்டுகளில் 8 முறை முதல்வராக ஆனவர் என்ற பெயர் பெற்றார் நிதிஷ் குமார்.
இப்படி கூட்டணி வைப்பதும், அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் தானே முதல்வராக பதவி வகிப்பதாலும் நிதிஷ்குமாரை, “பிரேக் அப்(முறிவு) பேட்ச் அப்(இணைதல்)” அரசியல்வாதி என்றும், அரசியல் தந்திரம் கற்றவர் என்றும் அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டார்.
பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் பாஜகவை தன்னுடன் கூட்டணியில் வைத்துக்கொள்வதும், பிறகு கூட்டணியை முறித்துக்கொள்வதும் என பாஜக கண்ணுக்குள் கைவிட்டு ஆட்டும் நிதிஷ் குமார், இன்று அக்கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை சந்தித்து ஓரணியில் திரள்வது பற்றி பேசி வருகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை இதுவரை சந்தித்துள்ளார்.
இதில் நவீன் பட்நாயக் மட்டும், 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்படும் திட்டம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்ற கட்சிகளை இணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
இப்படி தீவிர முயற்சியில் நிதிஷ் குமார் இறங்கியதால் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவாரோ என கேள்விகள் எழுந்தன. ஆனால் இதனை மறுத்துள்ள நிதிஷ் குமார் எனக்கு பதவி ஆசை இல்லை, நாட்டின் நலனுக்காக பாடுபடுவதே எனது முயற்சி” என்று விளக்கமளித்தார்.
நிதிஷ் குமாரின் முயற்சி வெற்றி பெறுமா…பொறுத்திருந்து பார்ப்போம்…
பிரியா
சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
அப்படியே கூம்பி பொளந்துடுவாரு..போங்கயா! வேற டைம் பாஸ் இல்லயா! 😀🤣🤣🤣🤣🤣