பாஜக ஆதரவு: 9வது முறை பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்

Published On:

| By christopher

ஜக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் 9வது முறையாக பிகார் முதல்வராக இன்று (ஜனவர் 28) பதவியேற்றுள்ளார்.

பிகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிதிஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம், 74 இடங்களில் வென்ற பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது.

பின்னர் 2022-ம் ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், 75 தொகுதிகள் வென்ற லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்தார்.

மேலும் மீண்டும் பிகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில், லல்லுவின் மகனும், எம்.எல்.ஏவுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில் திடீரென ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

அதன்படி பிகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று காலை சந்தித்த நிதிஷ்குமார், முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனால் ஆர்.ஜே.டி கட்சியுடன் இருந்த ஆட்சி கலைக்கப்பட்டதோடு, நாடாளுமன்ற தேர்தலையொட்டி உருவான 28 கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினார்.

இந்த நிலையில் பாஜக ஆதரவுடன் பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் 9வது முறையாக பிகார் முதலமைச்சராக ஜேடி(யு) தலைவர் நிதீஷ் குமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் பாஜகவை சேர்ந்த சம்ரத் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹாவும் பிகார் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதன்மூலம் இன்னும் 2 ஆண்டுகள் பாஜக ஆதரவுடன் பிகார் முதல்வராக நிதிஷ்குமார் நீடிப்பார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது : கே.எஸ்.அழகிரி

பெரிய ஹீரோ, பிரமாண்ட பட்ஜெட்… டோலிவுட்டில் ‘மாஸ்’ என்ட்ரி கொடுக்கும் அட்லி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel