பதவி காலம் முழுவதும் ஆதரவளிப்போம்: நிதிஷ்குமார் உறுதி!

Published On:

| By Selvam

பிரதமர் மோடியின் பதவி காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பாஜகவிற்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி இருக்கும் என்று நிதிஷ்குமார் இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று (ஜூன் 7) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், “இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அடுத்த தேர்தலில் நிச்சயமாக தோல்வியை சந்திப்பார்கள். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அவர்கள் தேசத்திற்காக பணியாற்றவில்லை. நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது.

பிகாரில் இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாம் அனைவரும் இங்கே ஒன்றிணைந்துள்ளோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நாம் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று நான் விரும்பினேன். உங்கள் பதவி காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பாஜகவிற்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி இருக்கும்.

நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் உங்களுடன் உறுதுணையாக நாங்கள் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் உயர்வு’ – மோடி பெருமிதம்!

வைரமுத்து பாடலில் பிழை… விழா மேடையில் போட்டுடைத்த விக்கிரமராஜா

Comments are closed.