எதிர்க்கட்சிகள் கூட்டம் : கலந்துகொள்ள போவது யார் யார்?

அரசியல் இந்தியா


பீகாரில் இன்று (ஜூன் 23) காலை 11 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசை, எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கடந்த ஜூன் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முக்கிய நிகழ்ச்சிகள் இருந்ததால் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று பீகார் மாநில முதல்வர் அறிவித்தார்.

இதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர் பாலு உள்ளிட்டோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பிகார் புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாட்னாவுக்கு வந்தடைந்தேன். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘ஆசியாவின் ஒளி’ புத்தர், கர்பூரி தாகூர் மற்றும் பிபி மண்டல் ஆகியோரை வழங்கிய இந்த மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாசிச, எதேச்சிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, இந்த சமூக நீதியின் பூமியில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியம் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Nitish kumar Opposition meeting

நேற்று இரவு பீகார் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரைப் பார்த்ததும் லாலுவின் காலில் விழுந்து வணங்கினார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் கலைஞரின் வரலாற்றை கூறும் புத்தகத்தை வழங்கினார்.

தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

Nitish kumar Opposition meeting

முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பீகாருக்கு வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு வருகை தந்தார். மம்தாவும் லாலு பிரசாத் யாதவ் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, லாலு பிரசாத்தை மிகவும் மதிப்பதாகவும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து பாஜகவை எதிர்த்து போராடுவோம் என்றும் தெரிவித்தார்

Nitish kumar Opposition meeting

தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் பீகார் வந்துள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவர், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே, உத்தர பிரதேசம் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், தேசிய மக்கள் கட்சி தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபாரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருந்தாலும் தனது ஆதரவை தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் சவுத்ரி ஜெயம் சிங் பீகார் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தை பற்றி ஐக்கிய ஜனதாதள கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், ” நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வேட்பாளரை எப்படி நிறுத்துவது என்பது இந்த கூட்டத்தின் முக்கிய விவாதமாக இருக்கும்.

பிஜு தனதா தள கட்சி தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ்
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவருமான மாயாவதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை இவர்கள் தெளிவுபடுத்தவில்லை என்பதால் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தியாகி கூறியுள்ளார்.

முன்னதாக, ‘மத்திய அரசு டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து தங்களுடைய நிலைப்பாட்டை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்த கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணிக்கும்’ என்று அக்கட்சி தலைமை தெரிவித்ததாக தகவல் வெளியானது.

Nitish kumar Opposition meeting


ஆனால் நேற்று மாலையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் பீகார் சென்று முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தனர்.

இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலை 8 மணியளவில் டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாட்னா கிளம்பினார்.

பிரியா

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் சோதனை!

நெஞ்சுவலி : மருத்துவமனையில் சி.வி.சண்முகம்

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *