கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கும் நிதிஷ்குமார்

Published On:

| By Kavi

வரும் ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (மே 21) காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலைஞருடைய நூற்றாண்டு பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர் ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கலைஞரின் நூற்றாண்டு விழாவினை யொட்டி “ஊர்கள் தோறும் திமுக” எனும் தலைப்பில் கிளை கழகங்களில் அமைந்துள்ள பழைய கொடிக்கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

கழக மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதி பெற்று எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒன்றியம், நகரம், பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான அரும்பாடுபட்ட கழக மூத்த முன்னோடிகளுக்குக் ‘கழகமே குடும்பம்’ என்னும் தலைப்பில் பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கழகத்தின் மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று கௌரவிக்க வேண்டும்.

அதோடு மாணவர்கள், இளைஞர்கள், பங்கேற்கும் வகையிலான நிகழ்வுகளையும் போட்டிகளையும் நடத்தி கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளை அவர்களின் நெஞ்சில் பதியச் செய்திட வேண்டும். அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதுடன் கலைஞர் எழுதிய புத்தகங்களையும் வழங்கிட வேண்டும்.

ஒவ்வொரு கழக மாவட்டத்திலும், கழக குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிடலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் என்றென்றும் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும்.

இத்தகைய கூட்டம் நடைபெறும் இடம் தேதி பட்டியலை மாவட்ட கழக நிர்வாகம் தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஜூன் 20ஆம்தேதி திருவாரூரில் உள்ள கலைஞர் கோட்டத்தைப் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் திறந்து வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

ரூ.2000 வாபஸ் – எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?: எஸ்.பி.ஐ சேர்மேன்!

“தொலைச்சி கட்டிருவேன்”: நள்ளிரவில் போலீசாரை எச்சரித்த அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share