பீகாரில் இன்று 8வது முறையாக மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார். பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியை நேற்று (ஆகஸ்ட் 9) ராஜினாமா செய்தார். தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து, மீண்டும் ஆட்சியமைக்கிறார். முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் இன்று (ஆகஸ்ட் 10) மதியம் 2 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
முதல்வர் பதவியால் வந்த விரிசல்!
பீகாரில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சி 74 தொகுதிகள் என மொத்தமுள்ள 243 இடங்களில், 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட, பாஜக அதிக இடங்களில் வென்ற போதும், நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுதந்தது பாஜக. எனினும் அதுமுதல் கூட்டணி கட்சிகளின் உறவில் விரிசல் தொடங்கியது.
ஆர்.சி.பி சிங் என்ற அம்பை உடைத்த நிதிஷ்
இதற்கிடையே கூட்டணி கட்சியான ஜேடியுவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தராமல் பாஜக வேடிக்கை காட்டியது. பின்னர் ஜேடியு தரப்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற ஆர்சிபி சிங்கையும் தன்பக்கம் வளைத்து போட்டது. இதில் கோபமடைந்த நிதிஷ்குமார், ஆர்சிபி சிங்குக்கு முடிவு கட்டும் வகையில், மாநிலங்களவை எம்பியாக நீடிக்க முடியாத படி, அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால் தனது எம்பி பதவியை இழந்த ஆர்சிபி சிங் அமைச்சர் பதவியையும் துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதனைதொடர்ந்து அவர் மீது வழக்குகள் தொடுத்து நிதிஷ்குமார் பயமுறுத்த, கட்சியில் இருந்து விலகினார் ஆர்.பி.சிங். தான் போட்ட திட்டம் கனகச்சிதமாக வேலை செய்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தார் நிதிஷ்குமார்.
ஆனால் மகாராஷ்டிரா பாணியில் ஆர்சிபி சிங் மூலமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சுக்குநூறாக உடைத்து, ஆட்சியை பிடிக்க பாஜக எய்த அடுத்த அம்பு குறித்து திடுக்கிட்டார். இதனையடுத்து பாஜகவை முற்றிலும் எதிர்க்க துணிந்தார். அக்னிபாதை திட்டம் உட்பட பாஜக அரசு சமீபத்தில் கொண்டுவந்த திட்டங்களை எதிர்த்த நிதிஷ்குமார், அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் பொருட்டு, பாஜக உடனான உறவை முறிக்க முடிவு செய்த அவர் எம்பி, எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்தை கூட்டினார். அதில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு, ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
மீண்டும் லாலு கட்சியுடன் கூட்டணி!
பாஜகவில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் சந்தித்து பேசினார். பின்னர் இரு தலைவர்களும் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது ஆர்ஜேடி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 6 கட்சிகளின் 164 எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார். அதன் அடிப்படையில் நிதிஷ்குமாரை புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் பீகார் முதல்வராக 8 வது முறை நிதிஷ் பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க உள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 79 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏ.க்களும், இடதுசாரிகளுக்கு 16 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
கூட்டணி மாறினாலும், முதல்வர் பதவி மாறவில்லை!
கடந்த 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நிதிஷ்குமார் தோல்வி அடைந்தார். பின்னர் 1985ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். 1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவிற்கு ஆதரவு கொடுத்து நிதிஷ்குமார் சிறிது காலத்தில் அவருடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் லாலுவுக்கு எதிராக தனது 14 ஆதரவு எம்பிகளுடன் விலகி, சமதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர் 1995ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி 7 இடங்களில் மட்டுமே வென்றது.
அப்போது லாலுவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட நிதிஷ், முதன்முறையாக வாஜ்பாய் காலத்தில் 1998ம் ஆண்டு முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதன்மூலம் 2000 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவியேற்ற 7 நாட்களில் நிதிஷ் ஆட்சி மூடுவிழா கண்டது. பின்னர் 2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக துணையுடன் வெற்றிபெற்று பீகாரின் முதலமைச்சர் ஆனார்.
எனினும் 2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக, ஜேடியு கூட்டணி முறிந்தது. அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், வலுவான மோடி அலையை வீழ்த்த ஜேடியு, லாலுவின் ஆர்ஜேடி இணைந்த மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இக்கூட்டணி அமைய லாலு முக்கிய பங்கு வகித்தார். 2015 தேர்தலில் ஜேடியு, ஆர்ஜேடி கூட்டணி பாஜவை வீழ்த்தியது. ஆனால் லாலுவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் இக்கூட்டணி முறிந்தது.
இதனையடுத்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் 2017ம் ஆண்டு பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார். இந்நிலையில் ஆர்.பி.சிங்கை வைத்து தனக்கு கட்டம் கட்ட பாஜக திட்டமிட்ட நிலையில், அதனுடன் கூட்டணியை முறித்து தற்போது 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்துள்ளார் நிதிஷ்குமார்.
இதன் மூலம் கடந்த 22 ஆண்டுகளில் பலமுறை கூட்டணிகளுக்கு குட்டு வைத்தாலும், தற்போது மீண்டும் 8வது முறை பிகாரின் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ் குமார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சிறப்புக் கட்டுரை : 2ஜி இழப்பு என்றால் 5ஜியில் நடந்தது என்ன?
அரசியல் ஆய்வு அருமை