நிதிஷ், நாயுடு தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்

Published On:

| By Kavi

பிகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று (ஜூன் 5) கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து போராடும். பாஜக ஆட்சி அமையக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

இதுதான் எங்களுடைய முடிவு. இந்த விஷயத்தில் அனைவரும் உடன்பட்டுள்ளோம். நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க முகாந்திரம் இல்லை. அதனால் அதை பற்றி பெரிதாக யாரும் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவில்லை.

ஆனால் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக இருக்கிறது. கூட்டணி கட்சிகளோடு ஆதரவோடுதான் ஆட்சி அமைக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டு காலத்துக்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே ஆதரவு அளிப்பதால் இப்போது ஆட்சி அமைக்கப்படுகிறது.

அவர்களுக்கிடையே எந்த நேரத்திலும் முரண்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த காலத்தில் பாஜக, மற்ற கட்சிகளை ஆட்டிப்படைத்தது. ஆனால் பாஜக ஆட்டிப்படைக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவும் தங்களது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பாஜக ஆட்சியமைப்பது நல்லதல்ல” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மோடி தார்மீக தோல்வி : இந்தியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு!

கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்: மோடியை சாடிய ஆ.ராசா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel