நித்யானந்தா ஆதீனங்களை பிடித்தது இப்படித்தான்! எக்ஸ்குளுசிவ் வீடியோ!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டிலும், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா சில ஆண்டுகளாகவே தலைமைறைவாக உள்ளார்.

அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக சொல்லி வருகிறார். இணையம் மூலமாகவே தென்படும் வகையில் தற்போது இருக்கும் நித்யானந்தா எப்போது வெளியே வந்தாலும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் காத்திருக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆதீனங்களை ஆக்கிரமித்து சர்ச்சைகளுக்கு உள்ளான நித்யானந்தா அந்த ஆதீனங்களை எப்படி கைப்பற்றப் பார்த்தார் என்பதற்கான சாட்சிக் காட்சிகள் இப்போது கிடைத்திருக்கின்றன.

முதல் சாட்சி பொதுவில் இருக்கும் ஒரு வீடியோ,,,

https://twitter.com/KailaasaInHyde1/status/1647348999949541376?s=20

ஹைதராபாத்தை சேர்ந்த கைலாசா குப்த காசி என்ற சீடர் கடந்த மே 16 ஆம் தேதி தனது ட்விட்டரில் ஓர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவின் தலைப்பே, “நித்யானந்தா தொண்டை மண்டல ஆதீனத்தின் 233 ஆவது குரு மகா சன்னிதானமாக உரிமை எவ்வாறு கொண்டாட முடியும்?” என்பதுதான்.

அந்த வீடியோவில், “தொண்டை மண்டல ஆதீனத்தின் 232 ஆவது ஆதீனம் 2000 ஆவது ஆண்டிலேயே இந்த ஆதீனத்தின் அடுத்த குரு மகா சன்னிதானமாக நித்யானந்தாவுக்கு முடிசூட்டி வைத்தார். இந்த முடிசூட்டு நிகழ்வு 2019 ஆம் ஆண்டில் சட்ட ரீதியான ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் தனக்குப் பிறகு குரு மகா சன்னிதானமாக நித்யானந்தாதான் இருக்க வேண்டும், ஆதீனத்துக்கு உரிய அனைத்து மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த ஆவணத்தில், ‘தொண்டை மண்டல சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நித்யானந்தா எங்களது அடுத்த மகா சன்னிதானம் ஆவார். அவரே இந்த ஆதீனத்தின் அதிகாரங்கள், கடமைகள், சடங்குகள், மரியாதைகளுக்கு உரியவர்.
230 ஆவது குருமகா சன்னிதானமே நித்யானந்தா பத்து வயதுக்குட்பட்ட பாலகன் ராஜசேகரனாக இருந்தபோதே அவரை அடையாளம் கண்டுணர்ந்திருக்கிறார். ராஜசேகரனாக இருந்தபோதே நித்யானந்தாவை எதிர்கால குருமகா சன்னிதானமாக அவர் அடையாளப்படுத்தியுள்ளார். இந்த ஆவணம் (உயில்) யாராலும் மாற்றப்பட முடியாதது” என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்துக்கும் நித்யானந்தா சீடர்களுக்கும் இடையே நடந்த கலாட்டாக்களை மறக்க முடியாது. முதலில் நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனத்தில் இடம் கொடுத்த சன்னிதானம் அதன் பிறகு நித்தியை ஏற்க மறுத்தார். ஆனால் நித்தியின் சீடர்கள் மதுரை ஆதீனத்தை என்னமோ வசியம் செய்து ஆதீனத்தைக் கைப்பற்றினார்கள். அப்போதைய மதுரை ஆதீனத்தின் ரகசியங்களை நித்தி தனது சீடர்களை அனுப்பி படம் பிடித்து அதை வைத்தே மதுரை ஆதீனத்தை பிளாக் மெயில் செய்தார் என்று வெளிப்படையாக புகார்கள் வெடித்தன. அதன் பின் மதுரையில் இருந்து நித்தியும் அவரது சீடர்களும் வெளியேறினார்கள்.

இதேபோல காஞ்சிபுரத்தில் இருக்கும் தொண்டை மண்டல ஆதீனத்திலும் நித்தியானந்தாவின் சீடர்கள் புகுந்து சர்ச்சை வெடித்தது. 2017ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீனத்தின் சன்னிதானமாக இருந்த ஞானப் பிரகாச அடிகளார் திடீரென காணாமல் போனார். அவர் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தனர் மடத்துக் காரர்கள். சில மாதங்களுக்குப் பின் அதாவது 2017 ஆகஸ்டு மாதம் பெங்களூருவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பி வந்த தொண்டை மண்டல ஆதீனம் ஞானப் பிரகாச அடிகளார், ‘நித்யானந்தாவின் சீடர்கள் இங்கே மடத்தில்தான் இருப்பார்கள். அவர்களை யாரும் எதுவும் பண்ண முடியாது” என்று அறிவித்தார்.

அப்போதே, “காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு முதலில் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர்கள் ஆதீனத்தோடு நெருங்கிப் பழகினார்கள். இந்த நிலையில்தான் அவர் பெங்களூரு சென்றார். அதன் பின் காஞ்சிபுரம் திரும்பி வந்து நித்யானந்தாவுக்கு இந்த ஆதீனத்தில் எல்லா உரிமையும் என்று பேட்டி கொடுத்தார். ஏதோ ஒரு வகையில் நித்தியிடம் தொண்டை மண்டல ஆதீனம் சிக்கிவிட்டார்” என்று ஏடுகளில் செய்திகள் வந்தன. அதன் பின்னர் நித்தி தலைமைறைவானதால் தொண்டை மண்டலத்தை கைப்பற்றும் அவரது கனவு கனவாகவே இருக்கிறது.

https://youtu.be/HR2OAl6BEso

இந்த நிலையில் ஆதீனங்கள் மீது எப்படி கண் வைத்தேன் என்பது பற்றி தனது சீடர்களிடம் நித்தியானந்தா ஓப்பனாக கூறும் எக்ஸ்குளூசிவ் வீடியோ ஒன்று மின்னம்பலத்துக்கு பிரத்யேகமாகக் கிடைத்திருக்கிறது.

தனது பெண் சீடர்களிடம் பேசும் நித்யானந்தா, “இவங்கள்லாம் நம்ம சாதிம்மா… ஆமாமா… இவங்களை எல்லாம் நான் மதுரை ஆதீனத்துல சில விஷயங்களை செய்யறதுக்காக கூட்டிட்டு வந்தேன். அப்பவே நான் ரெண்டு மூணு ஆதீனங்கள் மேல கண் வைச்சிருந்தேன். மதுரை ஆதீனம் அப்ப என் கைக்கு வரல. ஆனா எங்க சாதியை சேர்ந்தவங்க சன்னிதானமா வர்ற ஆதீனங்கள் மேல நான் கண் வச்சிருந்தேன்” என்று சொல்கிறார் நித்யானந்தா.

இதிலிருந்தே நித்யானந்தா தமிழ்நாட்டில் இரண்டு மூன்று ஆதீனங்களைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டதும், அதற்காக தனது ஆண், பெண் சீடர்களை அந்த ஆதீன மடத்துக்கு அனுப்பி வைத்ததும் இந்த வீடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

-வேந்தன்

“கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்”: தமிழிசை

வெங்கட்பிரபுவின் “கஸ்டடி”: படக்குழுவினர் சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share