டிஜிட்டல் திண்ணை:  அங்கேயும் வரலாமே? சேகர்பாபுவிடம் நைசாகப் பேசிய நிர்மலா சீதாராமன்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் செங்கோல் நிறுவப்படுவது பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோ வந்து விழுந்தது.  அதை முழுமையாக பார்த்ததும் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”புதிய நாடாளுமன்றத்தை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். குடியரசுத் தலைவர்தான் முறைப்படி நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில்தான் நேற்று (மே 24) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நேருவிடம் அளிக்கப்பட்ட  தமிழ் சோழ மன்னர்களின் கலாச்சார சின்னமான செங்கோல்…  மக்களவையில் நிறுவப்பட உள்ளது’ என்று அறிவித்தார்.

இது இந்தியாவில் ஏற்படுத்திய பரபரப்பை  விட தமிழகத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் மக்களவையில் நிறுவப்பட இருக்கும் செங்கோலை 1947 இல் அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்தது திருவாவடுதுறை இளைய தம்பிரான். அதே வழியில் இப்போது  மோடியிடம் அந்த செங்கோலை ஒப்படைக்க தமிழகத்தில் இருந்து இருபது ஆதீனங்கள் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாடு, சோழ மன்னர்கள், தமிழ் ஆதீனங்கள் என்று இந்த விவாதத்தின் போக்கே தமிழ்நாட்டில் மாறிவிட்டது.

அமித் ஷா அறிவிப்பதற்கு முன்பு வரை இந்த  செங்கோல் பற்றிய தகவல் தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட சிலருக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமித் ஷா நேற்று அறிவித்ததும் இன்று அதுபற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர்களாக இருக்கும் தமிழிசை, இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  ஆகியோரும் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் இதுகுறித்து நேற்று முன் தினம் இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சார சின்னமான செங்கோல் மக்களவையில் வைக்கப்படும் நிகழ்வு பற்றிய செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசிடம்  ராஜ்பவனில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகவல் சென்றது.  நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ள நிலையில்… ராஜ்பவனில் நடக்கும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தமிழக அரசு புறக்கணித்தால் தமிழர்களின் கலாச்சார சின்னமான செங்கோல் பற்றி அறிவிக்கும் நிகழ்விலேயே தமிழக அரசு அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் எழும். அந்த விமர்சனத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் ஒருவர் பங்கேற்கலாம் என்று முடிவு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த வகையில்தான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டு அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

இன்று (மே 25) காலை 11.30க்கு தொடங்கிய இந்த நிகழ்வுக்காக காலை 10.55 மணிக்கே ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்டார் அமைச்சர் சேகர்பாபு. அவரை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வரவேற்றனர். பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும் நிர்மலா சீதாராமனுடன் அமர்ந்திருந்த சேகர்பாபு  பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் தமிழ்நாடு ஆளுநர் அளித்த தேனீர் விருந்திலும் பங்கேற்றார்.

அப்போது அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,   ‘ரொம்ப குறுகிய அவகாசத்துலதான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சோம்.  இருந்தாலும் அழைப்பை ஏத்துக்கிட்டு நீங்க  இங்க வந்தது மகிழ்ச்சியா இருக்கு. இதேபோல பார்லிமென்ட் திறப்பு விழாவுக்கும் வரலாமே…  வந்தீங்கன்னா  இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அமைச்சர் சேகர்பாபு, ‘‘தமிழர் பண்பாடு சோழ  மன்னர்களின் செங்கோல் மக்களவையில் வைக்கப்படுவதில் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி.   தலைவருக்கும் மகிழ்ச்சி. அதனாலதான் என்னை அனுப்பி வச்சாரு. ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்  திறக்கணும்குறதுல  எங்கள் நிலைப்பாடு அதேதான். அதுல மாற்றமில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு முதல்வர் பற்றி விசாரித்திருக்கிறார் நிதியமைச்சர். அவரது சிங்கப்பூர் பயண விவரங்களை விசாரித்துவிட்டு. ‘ஹார்டு வொர்க் பண்றார் சிஎம்’ என்று நிர்மலா சீதாராமன் சொல்ல, ‘ஆமாம் மேடம். ஒரு நாளைக்கு 19  மணி நேரம் ஃபீல்டு ஒர்க் பண்றாரு’ என்று பதிலளித்துள்ளார் சேகர்பாபு.

அப்போது அருகே அமர்ந்திருந்த ஆளுநர் இல. கணேசன்,  ‘அவங்க அப்பா கலைஞரும் ரொம்ப  கடுமையா உழைப்பாரு. விடிகாலையிலேயே பத்திரிகைகளை படிச்சுட்டு    என் லயன்ல வந்துடுவாரு. இப்படி சொல்லியிருக்கீங்களே… எதை வச்சி சொல்றீங்கனு கேட்பாரு.  நாம சொன்னது சரின்னா அதை ஏத்துப்பாரு. சரியில்லைன்னா அதுக்கு விளக்கம் கொடுப்பாரு’ என்று கலைஞருடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

அமைச்சர் சேகர்பாபு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும்போது மீண்டும் அவரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழ்நாட்டு செங்கோல் மக்களவையில வைப்பது நமக்கு எல்லாம் பெருமை.  தமிழ்நாட்லேர்ந்து எல்லாரும் வரணும்னு விரும்புறோம். இதுல அரசியல் எல்லாம் இல்லை, மறுபடியும் சிஎம் கிட்ட சொல்லுங்க’ என்று அழுத்தமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார். அமைச்சர் சேகர்பாபுவும், ‘நான் தலைவரிடம் சொல்றேன்’ என்று பதிலளித்துவிட்டு கிளம்பியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட’கில்லி’பட நடிகர்!

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “டிஜிட்டல் திண்ணை:  அங்கேயும் வரலாமே? சேகர்பாபுவிடம் நைசாகப் பேசிய நிர்மலா சீதாராமன்

  1. குடியரசுத்தலைவரை அழைக்காததுதான் அரசியல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *