காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தேசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நாடு பொருளாதார சீரழிவை சந்தித்தது என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 9) குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2004-2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்காலத்தின் பொருளாதர நிலை மற்றும்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்காலத்தின் தற்போதைய 10 ஆண்டுகால பொருளாதார நிலை குறித்து,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 8) மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு இந்திய பொருளாதாரம் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியாவையும், அதன் பெருமையையும் மீட்டெடுப்பதற்காக பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உண்மை தகவல்களை வழங்குவதே இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் காமன்வெல்த் தொடரில் நடைபெற்ற ஊழல் நாடு முழுவதும் அவமானத்தை ஏற்படுத்தியது. யுபிஏ அரசாங்கத்தை விட என்டிஏ அரசு உலகளாவிய நெருக்கடியை திறம்பட கையாண்டது.
யுபிஏ அரசின் 10 ஆண்டுகால ஆட்சிக்கும், என்டிஏ அரசின் 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வேறுபாட்டை இந்த வெள்ளை அறிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.
குறிப்பாக தேசத்தை முதன்மைப்படுத்துவதற்காக என்டிஏ அரசு மேற்கொண்ட முயற்சிகள் இந்த வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
யுபிஏ அரசின் நிலக்கரி ஊழல் காரணமாக இந்தியா பெரும் இழப்பைச் சந்தித்தது. ஆனால், நிலக்கரியை வைரமாக மாற்றியது எங்கள் அரசு தான்.
நீங்கள் தேசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தபோது நாடு பொருளாதார சீரழிவை சந்தித்தது.
2008-க்குப் பிறகு உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, என்ன நடந்தது மற்றும் 2019-ஆம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு பிறகு என்ன நடந்தது என்பது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது”, என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ்: நிர்வாகிகளுக்கு சீமான் சூட்டிய புதிய பட்டம்!