எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனத்திடம் வாங்கிய கடனை மத்திய அரசு திரும்ப செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று நிர்மலா சீதாராமன் பேசும்போது, “ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது பிரதமருக்கு வெட்கமில்லையா என்று திமுக நடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிலளிக்க உள்ளேன். மதுரையில் ரூ.1977 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவனைக்காக ரூ.1627 கோடி ஜெய்க்கா நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. இது மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு இந்த கடனை அடைக்கும். தமிழக அரசுக்கு இதன் மூலம் எந்த கடனும் இல்லை.
அதனால் இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாக பேச வேண்டாம். எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு காலதாமதம் செய்தது. இதனால் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பட்ஜெட் ரூ.1200 கோடியிலிருந்து ரூ.1900 கோடியாக உயர்ந்தது.
அனைத்து மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் மட்டும் தான் இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கை வசதிகள் இருக்கும். ராமநாதபுரத்தில் தற்காலிக எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமைக்கப்பட்டு இந்த ஆண்டு 99 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதனை தொடர்ந்து திமுக எம்.பிக்கள் எழுந்து “எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “கடன் வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் வெட்கமில்லையா என்று கேட்டார்கள். அதுகுறித்து பேசியதும் எப்பொழுது எய்ம்ஸ் கட்டுவீர்கள் என்று கேட்கிறார்கள். திமுக உறுப்பினர்கள் எய்ம்ஸ் விவகாரத்தில் பொய் சொல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
‘ ஸ்மிருதி இரானி திமுகவை பார்த்து அலறுகிறார்’: ஸ்டாலின் பதில்!
“மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம்” – எடப்பாடியை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர்