central government give more funds to Tamil Nadu

தமிழக நிதி – வாங்கியதை விட கொடுத்தது அதிகம் : புள்ளி விவரங்களோடு சொன்ன நிர்மலா சீதாராமன்

அரசியல் தமிழகம்

central government give more funds to Tamil Nadu

தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி சென்னை மேற்கு மாம்பலத்தில் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் கலந்துகொண்டு மத்திய அரசின் 17 திட்டங்கள் குறித்து பேசினார்.

தமிழ்நாட்டில் இந்த திட்டங்களால் எவ்வளவு பேர் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களுடன் பேசினார்.

அப்போது அவர், “பிரதமரின் கிராமசாலை திட்டம், ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களால் நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை பலரும் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாரபட்சமின்றி நிதி வழங்கி வருகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது” என்றார்

தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட தொகையினை  பட்டியலிட்டார்.

“பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறப்பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு 6.8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மட்டும் 1.5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 57 லட்சம் மற்றும் நகரப்புறங்களில் 5.23 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 6,751 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் 6,340 பயனாளிகள் பயனடைந்திருக்கின்றனர்.

மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் மாநிலம் முழுவதும் 37 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்கின்றனர். சென்னையில் 32,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில அரசின் பங்கு எதுவுமின்றி 3.64 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன, சென்னையைப் பொருத்தமட்டில் 25.7 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.

மக்கள் வங்கித் திட்டம் எனப்படும் ஜன்தன் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பேருக்கு இருப்புத் தொகை ஏதுமற்ற வங்கி கணக்குகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன, இதில் 58 சதவீதம் பெண்கள் ஆவர்.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உத்தரவாதமின்றி 2.67 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் 5.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு 2200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 3.6 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை- பெங்களூர் விரைவுச் சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது, 150 கி.மீ. கிழக்கு கடற்கரை சாலை ரூ.3000 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் திட்டத்தைப் பொருத்தவரை இந்த ரயிலுக்கான அனைத்துப் பெட்டிகளும் சென்னை பெரம்பூர் இணைப்பு ரயில்பெட்டி (ஐசிஎப்) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது, மாநிலத்தில் 4 வழித்தடங்களில் இந்த ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவே, கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் மூலம் தமிழ்நாடு வெறும் 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. எனவே தமிழ்நாடு கொடுத்ததை காட்டிலும் மத்திய அரசு அதிகமாக கொடுத்திருக்கிறது.

வரிப்பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 2.8 லட்சம் கோடி ரூபாயும், மானியங்கள் மற்றும் உதவித் தொகை அடிப்படையில் அதே காலகட்டத்தில் 2.58 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியைப் பொறுத்தவரை, மாநில ஜிஎஸ்டி வரி வருவாயில் 100 சதவீதமும் மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கும் இது பொருந்தும், அதில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 36,353 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் மத்திய ஜிஎஸ்டியை பொறுத்தவரை 41 சதவீதம் மாநிலத்திற்கே ஒதுக்கப்படுகிறது. .

மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்த, 37,965 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வி திட்டத்தை செயல்படுத்த 11,116 கோடி ரூபாயும், கிராம சாலைகள் திட்டத்திற்கு 3,637 கோடி ரூபாயும், வீட்டு வசதி திட்டத்திற்கு 4,739 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரதமர் மோடி ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வந்திருந்த போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருப்பதாக தெரிவித்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசு கொடுத்ததை விட மத்திய அரசு அதிக நிதி கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சென்னையில் கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழப்பு!

விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா?

central government give more funds to Tamil Nadu

+1
0
+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *