ரூ.4000 கோடியை என்ன செய்தீர்கள்? திமுக அரசுக்கு நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

Published On:

| By Kavi

சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்றச்சாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய பகுதி மக்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி பெருமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறிவிட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

“வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் அளித்துள்ள அளவை விட அதிகமாக மழை பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

“ஒருசில இடங்களில் மட்டும்தான் அதிகன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சொன்னது” என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

“இந்த இயற்கைப் பேரிடரின் எதிர்பாராத தீவிரம் மற்றும் தாக்கத்தை இந்திய வானிலை ஆய்வுத்துறை மிகவும் துல்லியமாக, சரியான நேரத்தில் முன்னறிவிப்புகளைச் செய்திருந்தால் குறைக்கப்பட்டிருக்கலாம்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

அமித்ஷா உடனடி நடவடிக்கை

இன்று (டிசம்பர் 22) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“மழையால் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் தகவல் 18ஆம் தேதியே கிடைத்தது.  கட்சிக்காரர்கள் போன் செய்தார்கள். அன்று பார்லிமெண்ட் நடந்து கொண்டிருக்கிறது. உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, இந்த 4 மாவட்டங்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அவரும் உடனடியாக தேவையான குழுக்களை அனுப்பி வைத்தார். படகுகள், ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 21ஆம் தேதி வரை 42,290 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர். மாநில போலீஸ், கடற்படை, விமானப்படை ஆகியோர் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசை சேர்ந்த அனைத்து துறையும் களத்தில் இறங்கியது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 800க்கும் மேற்பட்ட பயணிகளை, ரயில்வே சார்பில் சிறப்பு ரயிலும், போதுமான அளவு பேருந்துகளும் கொடுத்து அவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டார்கள்.

இதுதவிர 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன என்றாலும் கூட அனைத்து துறையும் சேர்ந்து சமயத்தில் உதவி செய்திருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சகத்தில் இரு கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. இங்கிருந்து 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு போக வேண்டிய உதவிகளை உடனுக்குடன் அனுப்பி வருகிறோம்.

இந்திய விமானப்படை, கடற்படை மூலமாக 9 ஹெலிகாப்டர்கள், 70 முறை மக்களை மீட்டிருக்கிறது. கடற்படையும் கடலோர பகுதிகளில் இருந்த மக்களை மீட்டது.

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து IMCT எனப்படும் மத்திய அரசின் குழு 19ஆம் தேதி மாலைக்குள் சென்றது. தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை, விமானப்படை , கடலோர காவல் படை ஆகியவை மட்டும் 5,049 பேரை மீட்டிருக்கிறார்கள்.

இதில் ராணுவமும் திருவனந்தபுரம், வெல்லிங்டன் பகுதிகளில் இருந்தும் படைகளை அனுப்பியது.
விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட்டதால் ஸ்ரீவைகுண்டம் எஸ்விஎஸ் பள்ளியில் இருந்து, ஒரு கர்ப்பிணி பெண், அவருடைய குழந்தை மீட்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது” என்று மீட்பு பணிகள் குறித்து பேசினார்.

பேரிடர் நிவாரண நிதி

மேலும் அவர், “ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பணம் கொடுப்பதுண்டு. அதில் மத்திய அரசின் பங்கை சமயத்துக்கு கொடுக்க வேண்டும்.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் 2023 வரை 813.15 கோடி ரூபாய் தமிழ்நாட்டிடம் இருந்திருக்கிறது. இந்த வருடத்துக்கான 900 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுக்க வேண்டும். இதில் ரூ.450 கோடியை புயல் வருவதற்கு முன்னதாகவே கொடுத்துவிட்டோம்.

இரண்டவாது தவணையாக டிசம்பர் 12ஆம் தேதி ரூ.450 கோடி கொடுத்துவிட்டோம். அதன்படி 900 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுவிட்டது.

இதுமட்டுமில்லாமல், சென்னை மாநில ஆய்வு மையம், தென்காசி, தூத்துக்குடி,குமரி, நெல்லையில் பெய்த மழையை பற்றி 12ஆம் தேதி அன்றே எச்சரிக்கை கொடுத்துவிட்டது. தீவிர மழை பெய்யும் என்று சொல்லிவிட்டது.

சென்னையில் இருக்கக் கூடிய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு 5 நாளுக்கும் முன்பே, வரக்கூடிய 5 நாட்களில் என்ன நடக்கும் என சொல்லிக்கொண்டே இருக்கிறது. முன்னெச்சரிக்கைக்காக ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும், அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சொல்கிறது.

அதனால் முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் இதை கேட்டுக்கொள்ளுங்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் என்பது அதீநவின தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்று “Doppler” கருவிகள் உள்ளன.

எனவே தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர் குறித்து 12ஆம் தேதியே செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வருஷத்துக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியிருக்கிறது. இதை விவரமாக சொல்லியிருக்கிறார்கள்.
குற்றச்சாட்டு வைக்கிறவர்கள் அதை விவரமாக எடுத்துச் சொல்ல வேண்டும். நான் கேட்கிறேன், இந்த மழைக்கு அவர்கள் செய்த ஏற்பாடுகள் என்ன?

சாதாரண மழை பெய்து வெள்ளம் வந்தாலும் கூட, அந்த மாவட்டங்களில் பொறுப்புள்ள அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்து மக்களை மீட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எப்போது போனார்கள்?

மத்திய அமைச்சராக சில விஷயங்களை பேசக்கூடாது. இருந்தாலும் சொல்கிறேன்… தேசிய பேரிடர் மீட்பு குழு செல்வதற்கு முன்னதாக அங்கு யாரேனும் சென்றார்களா?. இல்லையே… குற்றம் சொல்வது எளிது.

4000 கோடி ரூபாயில், 92 சதவிகிதம் செலவழிக்கப்பட்டுள்ளது, என்ன மழை வந்தாலும் சென்னைக்கு ஒன்றும் ஆகாது என்று ஒரு அமைச்சர் சொன்னார். வெள்ளம் வந்த பிறகு 42 சதவிகிதம் தான் செலவழிக்கப்பட்டுள்ளது. மீதி செலவழிக்கப்படவில்லை என்று சொல்கிறார்.

இந்த 4000 கோடியை என்ன செய்தீர்கள்?. வானிலை ஆய்வு மையம் சரியாக இல்லை. இஞ்ச் பை இஞ்ச் சொல்லியிருந்தால் எல்லாம் சரியாக செய்திருப்போம் என்று சொல்லக்கூடியவர்கள், இந்த பணத்தை என்ன செய்தீர்கள்.

92 சதவிகிதம் எங்கிருக்கிறது. 42 சதவிகிதம் எங்கிருக்கிறது. இந்த வித்தியாசம் கூட தெரியாமல் பேசக்கூடிய ஒரு அமைச்சர், 0.2செமீ மழை கூடுதலாக பெய்யும் என்று சொல்லியிருந்தால் கூட ஏற்பாடு செய்திருப்போம் என்று பேசுகிறீர்களா? என்ன அநியாயம்.

அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? 12 ஆம் தேதி எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நீண்டநாள் தோழியை மணந்த சென்னை வீரர்… ரசிகர்கள் வாழ்த்து மழை!

நீக்கப்பட்ட பெயர் பலகை: ஸ்டாலினை சந்தித்த பொன்முடி

IND vs SA: சஞ்சு சாம்சன் அதிரடியால் தொடரை கைப்பற்றிய இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share