மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 1989-ஆம் ஆண்டு சட்டசபையில் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை குற்றஞ்சாட்டினார்.
மக்களவையில் பிரதமர் மோடியின் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று இன்று (ஆகஸ்ட் 10) பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக எம்.பி.க்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
அவர், “மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என எங்கும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் அரசியல் செய்யக்கூடாது.
ஆனால் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த சபையில் நினைவூட்ட விரும்புகிறேன்.
அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டார். அதைக்கண்டு திமுக உறுப்பினர்கள் சிரித்தனர்.
இதனால் கோபம் கொண்ட ஜெயலலிதா, நான் முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று சபதம் எடுத்தார். அவர் சொன்னபடியே 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வராகி சட்டசபைக்குள் வந்தார்.” என்று கூறினார்.
இதற்கு டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக எம்,பி.க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட நிலையில், மக்களவை பற்றி, திரௌபதியை பற்றி, மணிப்பூர் பெண்களைப் பற்றி பேசுகிறீர்களே, ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? ” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் மதுரை எய்ம்ஸ், செங்கோல் விவகாரம் குறித்து திமுக எம்.பிக்களின் கருத்துக்கு பதிலளித்து பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எய்ம்ஸ் மருத்துவமனை: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!
கலைஞர் நூற்றாண்டு: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!