நியாய விலைக்கடைகளில் பிரதமர் மோடியின் படம் இல்லாததால் கோபப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, சிலிண்டர்களில் மோடி புகைப்படத்துடன் விலையையும் ஒட்டி விநியோகம் செய்து பதிலடி கொடுத்திருகிறது தெலங்கானா அரசு.
தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில் 3-வது சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
அதனால் இப்போதிலிருந்தே அக்கட்சி நிர்வாகிகள் தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெலுங்கானாவிற்கு சென்றுள்ளார்.
அவர் நேற்று (செப்டம்பர் 2) தெலுங்கானா மாநிலத்தின் ஜாஹீராபாத் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காமரெட்டி மாவட்டத்தில் பிர்கூர் கிராம நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்தக் கடையில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் இல்லாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடிந்து கொண்டார்.
குறிப்பாக இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தெரியாது என பதிலளித்தார்.
இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் விலை கிலோ ரூ. 35. இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர்.

இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.3.30 , மீதமுள்ள ரூ.30.70 காசுகளை மத்திய அரசு செலவு செய்கிறது.
போக்குவரத்து செலவை கூட மத்திய அரசே ஏற்கிறது. ஆனால், தெலங்கானா அரசு இதை தாங்களே வழங்குவதாகக் கூறிக் கொள்கிறது என்றார்.
மேலும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி சில மணி நேரங்களுக்குள் தெரிந்து கொண்டு தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சியின் தலைவர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் “தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி” கட்சியினர் எரிவாயு சிலிண்டர்களில் விலையுடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஓட்டி விநியோகித்து வருகின்றனர். அதில் சிலிண்டரின் விலை ரூ. 1105 ரூபாய் என்றும் அச்சடித்துள்ளனர்.
சமீப காலமாக எரிவாயு சிலிண்டர் விலை அதிக அளவு உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை ஏற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கலை.ரா