ஆபரேஷன் ஆ.ராசா : எல்.முருகன் போடும் நீலகிரி ஸ்கெட்ச்!

அரசியல்

இந்து மதம் குறித்த ஆ.ராசாவின் கருத்துக்கு எதிராக பாஜகவினர் கொந்தளித்து வருகிறார்கள்.

குறிப்பாக கோவையில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.

மற்றொரு பக்கம், ஆ.ராசாவின் சொந்த தொகுதியான நீலகிரியிலேயே கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டது இந்து முன்னணி.

இவை அனைத்திற்கும் பின்னணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் பக்கா ப்ளான் இருக்கிறது.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் திமுக வேட்பாளர் கயல்விழியிடம் தோல்வியை சந்தித்தார்.

1,393 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகனின் வெற்றி கை நழுவி சென்றது. இதனை அடுத்து 2021ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு வரும் 2027ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருந்தாலும், அடுத்து வரப்போகும் மக்களவை தேர்தலில், ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் போட்டியிட குறிவைத்துள்ளார்.

உதகை, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் நீலகிரி மக்களவை தொகுதி.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம். 2010ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அங்கு வலுவிழக்க தொடங்கிய போது, அதிமுக பாஜக என காங்கிரஸின் வாக்கு வங்கி பிரிய ஆரம்பித்தது.

மக்களவை தேர்தல்களில் 2 முறை பாஜக இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. 1998 மற்றும் 1999ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக சார்பில் களமிறங்கிய மாஸ்டர் மதன் வெற்றியை தட்டிச் சென்றார்.

தற்போது அதே வரிசையில் நீலகிரி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார் எல்.முருகன். ஆ.ராசாவின் பேச்சு இந்து மதத்துக்கு எதிராக இருப்பதாக பாஜக போராட்டங்களை நடத்தி வருகிறது.

நீலகிரியில் இந்து முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தவர் எல்.முருகன். திமுக இந்து மதத்திற்கு எதிராக செயல்படுவதாக பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

தற்போது ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி பாஜக குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்துள்ளது. இதை வைத்து நீலகிரி தொகுதியில் தனக்கான இடத்தை பிடித்துவிட திட்டமிடுகிறார் எல்.முருகன்.

ஏற்கனவே 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை தேசிய பட்டியலின சமூக ஆணையத்தின் துணை தலைவராக இருந்த போதே இந்த தொகுதி மக்களுக்காக சைலண்டாக பல்வேறு பணிகளை செய்துள்ளார் எல். முருகன்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது, மலைவாழ் மக்கள் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்வது, கடனுதவிகளை பெற்று தருவது என மக்களுடன் நேரடியாக பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய பணிகளை அவர் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறார்.

தற்போது, ஆ.ராசாவின் பேச்சை ஆயுதமாக எடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள எல்.முருகனின் நீலகிரி கணக்கு பலனை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அப்துல் ராஃபிக்

ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல் : திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
3
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.