கோவையில் நடந்த கார் வெடிப்பு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே வெளியிட்டது எப்படி என்று அண்ணாமலையை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரிக்கவேண்டும் என்று செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில்பாலாஜி இன்று(அக்டோபர் 27) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவையை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டத்தில் எந்தவிதமான அச்சமும் இல்லை, பதற்றமும் இல்லை.
ஆனால் நடந்திருக்கக்கூடிய சம்பவத்தை சிலர் வேண்டுமென்றே பெரிதாக்கி கோவையில் ஏதோ ஒரு பதற்றமான சூழல் இருப்பதை போலவும், அது இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது போலவும் செய்திகளை வெளியிடுகின்றனர்.

சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கோவையில் இருக்கும் உண்மை சூழலை மக்களிடம் எடுத்து சொன்னால் போதும்.
நடந்திருக்கக்கூடிய நிகழ்வு வருத்தப்படக்கூடியது. தீவிரமாக விசாரித்து, துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு காவல்துறை கைது செய்திருக்கிறது.
இதில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை, எந்தவிதமான குறுக்கீடும் இல்லை. வழக்கின் தன்மையை பொறுத்து இதனை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் பரிந்துரை செய்திருக்கிறார்.
கோவையின் வளர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் முதலமைச்சர் தனிகவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மற்ற மாவட்டங்களைவிட கோவைக்கு மட்டும் அரசு நிகழ்ச்சிகளுக்காக முதலமைச்சர் 5 முறை வந்திருக்கிறார்.
அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் சொல்லும் செய்திகளை பெரிதுப்படுத்தி மக்களிடம் ஒரு பதட்ட சூழலை உண்டாக்கவேண்டாம்.
மதுரையில் ராணுவ வீரரின் உயிரிழப்பை எப்படி அரசியலாக்கினார்களோ அதேபோன்று கோவையில் நடந்த நிகழ்வையும் அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள்” என்றார்.

கோவையில் நடந்து வரும் விசாரணை நிலவரங்களை காவல்துறை தெரிவிப்பதற்கு முன்பாகவே அண்ணாமலை கூறுவது எப்படி என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, சந்தேகத்தின் அடிப்படையில் கூட யார் பெயரையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. இறுதியில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாகவே ஒரு கட்சியின் தலைவர் இந்த தகவல்களை வெளியிடுகிறார். இந்த தகவல்கள் முன்கூட்டியே அவருக்கு தெரிந்தது எப்படி என்று என்.ஐ.ஏ முதலில் விசாரிக்கவேண்டியது அண்ணாமலையை தான் என்று பதிலளித்தார்.
கோவை மாவட்டத்தில் காவல்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது, 40 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் பாஜக நடத்திய பந்த் என்பது தேவையற்றது என்று செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
கலை.ரா