நெய்வேலியில் இன்று என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாமகவினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது.
என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து இன்று(ஜூலை 28) நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1000 பேருக்கு அதிகமானோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் முற்றுகையில் சுமார் 12 மணியளவில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக பேசினார்.
சுமார் 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில் , அன்புமணி ராமதாஸ் உட்பட பாமகவினர் என்.எல்.சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது, பாமகவைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் பாக்கெட்டை போலீசார் மீது வீசினர். போலீசார் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தியனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது கல் வீசியதில் 7க்கும் மேற்பட்டோருக்கு மண்டை உடைந்தது. நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.
வணங்காமுடி, பிரியா