நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சமீப வாரங்களாக மீண்டும் பெரியார் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டும் இன்னமும் சீமான் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
‘இந்நிலையில் இன்று (ஜனவரி 23) காலை சென்னையில் ஆங்காங்கே கறுப்பு வெள்ளையில் சில போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்தன.
’அண்டப் புளுகனோடு இனியும் இருக்கப் போவதில்லை…மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப் போவதில்லை’ என்று அந்த போஸ்டர்களின் வாசகங்கள் இருந்தன. அந்த போஸ்டர்களின் பின்னணி பற்றி விசாரித்தபோதுதான்,

நாளை ஜனவரி 24 ஆம் தேதி காலை அறிவாலயத்தில் சுமார் 3 ஆயிரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் சேர இருக்கும் தகவல் கிடைத்தது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் நிர்வாகிகள் வெளியேறினர். அவர்கள் சீமான் மீது பல்வேறு புகார்களை கூறினார்கள். குறிப்பாக கடந்த சில வாரங்களாக பெரியார் மீது சீமான் வார்த்தைத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது பிடிக்காமலேயே பல நிர்வாகிகளும் வெளியேறினார்கள்.
இவர்களில் சில மாவட்டங்களில் திமுகவில் ஆங்காங்கே சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வந்தார் திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ் காந்தி. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் முன்னணி செயல்பாட்டாளராக இருந்த ராஜீவ் காந்தி சில வருடங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
இந்நிலையில் ராஜீவ் காந்தியின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுதும் பல மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் பேர் நாளை அறிவாலயத்தில் திமுகவில் இணைகிறார்கள்.
இதற்காக முதல்வர் ஸ்டாலின், உதயநிதியிடம் பேசி ஒப்புதல் வாங்கியுள்ளார் ராஜீவ் காந்தி.

நேற்று (ஜனவரி 22) சீமான் வீடு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய அமைப்பின் நிர்வாகிகள், ‘சீமானை ஏன் இன்னும் திமுக அரசு கைது செய்யவில்லை? ‘ என்று கேள்வி எழுப்பினார்கள்.
இப்போது சீமான் கைது ஆனால் ஈரோடு கிழக்கில் அது அவருக்கு அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்துமோ என்பதால்தான் சீமான் கைது தள்ளிப் போகிறது என்று அந்த போராட்டத்திலேயே சிலர் கூறினர்.
இந்நிலையில் நம்மிடம் பேசிய திமுக இளைஞரணியினர், “சீமானை கைது செய்து அவரை தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து வைத்திருப்பதை விட… அவரை அரசியல் ரீதியாக அமைப்பு ரீதியாக பலவீனம் ஆக்குவதே முக்கியம். அதைத்தான் தற்போது திமுக மிக அமைதியாக செய்து வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்ட நிர்வாகிகள் விலகிவிட்டனர். அவர்கள் அனைவரும் திமுகவுக்கு வருகின்றனர். நாளை திமுகவில் இணையும் மூவாயிரம் பேரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதைப் போல சீமான் கட்சியை ஒவ்வொரு மாவட்டமாக உருவி வருகிறோம்” என்கிறார்கள்.