எவ்வளவு மனு கொடுத்தும் பிரயோஜனம் இல்லை: செல்லூர் ராஜு

அரசியல்

“எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கள் தொகுதிக்குட்பட்ட 10 அடிப்படை பிரச்சினைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்க வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி, பலரும் தங்கள் தொகுதிக்குட்பட்ட பிரச்சினைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, தம் தொகுதிக்குட்பட்ட 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் இன்று (செப்டம்பர் 6) வழங்கினார்.

அதில், ‘82, 83வது மாநகராட்சி வார்டுகளில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் நீண்டநாட்களாக குடியிருக்கும் 973 குடும்பங்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளான விராட்டிப்பத்து, பொன்மேனி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

63, 65வது வார்டுகளில் தாழ்வாகச் செல்லக்கூடிய உயர் மின்கம்பிகளை அகற்ற வேண்டும். தொகுதிக்குள் அரசு இருபாலர் கல்லூரியைச் செயல்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட பிரச்சினைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட ஆட்சியரிடம் இந்தப் பட்டியலை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எவ்வளவு மனுக்கள் கொடுத்தாலும் நிறைவேற்றுவதில்லை.

தற்போது முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 10 கோரிக்கைகளை மனுவாக அளித்து உள்ளேன்.

தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் பெண் ஒருவர், தலா 1 இலட்சம் ரூபாய் வரை பயனடைந்தார். ஆனால், புதுமைப் பெண் திட்டத்தால் ஒருவருக்கு 36,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

ஆகையால், எது சிறந்த திட்டம் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். எந்தவொரு குளறுபடியும் இல்லாமல் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு மிகவும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்.

திமுக தலைமையிலான தமிழக அரசு கொண்டுவரும் திட்டங்கள் அறிவிப்போடும், விளம்பரத்தோடும் நின்றுவிடுகின்றன.

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிவிப்பால் பலர் நகைகளை இழந்துள்ளனர். 48 லட்சம் பேர் பயனடையக்கூடிய நகைக்கடன் தள்ளுபடியில், 13 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர்.

உதயநிதி, கனிமொழி ஆகியோரின் பேச்சைக் கேட்டு மக்கள் நகைகளை இழந்து புலம்பிக்கொண்டுள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர எங்கள் ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்தோம். எங்கள் ஆட்சியில் கொரோனாவால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதமானது.

தமிழக அரசு விரைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

தொண்டர்கள் முடிவு எடுத்துவிட்டால் அதை யாரும் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர் ஆவார்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

வேலுமணிக்கு ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆஜர்: பாஜகவை விமர்சித்த தமிழக அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *