அடுத்த முதல்வர் பட்நாவிஸ்… மத்திய அமைச்சராகிறார் ஷிண்டே?

Published On:

| By Kavi

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 132, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 31, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா – 57 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் மகாயுதி கூட்டணி மொத்தமாக 234 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கவுள்ளது.

தற்போது முதல்வர் பதவிக்கு ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் இடையே போட்டி நிலவுகிறது. பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளதால் பட்னாவிஸை முதல்வராக நியமிக்க அக்கட்சியின் தலைமை திட்டமிட்டு வருகிறது.

அதேசமயம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டதால் அவருக்கே முதல்வர் பதவி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.  மும்பையில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனாவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவிக்கு ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார்.

ஷிண்டே தற்போது முதல்வராக உள்ள நிலையில் தனது பதவியை விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனா மூத்த தலைவருமான தீபக் கேசர்கர்,  “மாநிலத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவே தொடர வேண்டும் என்று எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்” என்று கூறினார்.

முதல்வர் பதவி தொடர்பாக கடந்த 23ஆம் தேதியில் இருந்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் பாஜக தலைமையால் நடத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஷிண்டே இன்னும் முழுமையாக சம்மதம் தெரிவிக்கவில்லை.

இன்று(நவம்பர் 25) இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஷிண்டே தரப்புக்கு 9 மக்களவை எம்.பி.க்கள் உள்ளதால் அவரை முதல்வர் பதவிக்கு இணையாக மத்திய அமைச்சர் பதவி வழங்கி அவரை டெல்லிக்கு அழைக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

ஷிண்டே கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கு முக்கிய துறைகளில்  அமைச்சர் பதவி கொடுக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டிருக்கிறது.

இதற்கிடையே நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அஜித்பவார் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

சரிந்தது தங்கம் விலை… நகை பர்ச்சேஸ் பண்ணுவதற்கு சரியான டைம்!

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?: வெதர்மேன் பிரதீப் ஜான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share